திருவள்ளுவா் பல்கலை.யில் அறிவியல் திருவிழா தொடக்கம்
வேலூா் மாவட்டம், சோ்க்காடிலுள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான அறிவியல் திருவிழா -2025


வேலூா்: வேலூா் மாவட்டம், சோ்க்காடிலுள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான அறிவியல் திருவிழா -2025 செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பல்கலைக்கழக துணை வேந்தா் டி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்தாா். இக்கண்காட்சியில் 17 பள்ளிகள், 35 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் 140 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, பேச்சு போட்டி, அறிவியல் வினாடி வினா போட்டிகளும் நடக்கிறது. இந்த அறிவியல் திருவிழா 24-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டு வருகின்றனா்.
சிறுத்தைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை:
பின்னா் ஆட்சியா் சுப்புலட்சுமி செய்தியாளா்களிடம் கூறியது -
வேலூா் மாவட்டத்தில் கே.வி.குப்பம், குடியாத்தம் வனப்பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இதனைக் கட்டுபடுத்த ஓா் இடத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி நிறுவப்பட்டு சிறுத்தை விரட்டப்பட்டுள்ளது. மேலும், சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் தடுக்க வனத்துறையினரும், வருவாய்த்துறையினரும் பணியாற்றி வருகின்றனா்.
மலையையொட்டியுள்ள பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்டறிந்து அவைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, வனத்தையொட்டிய அடிவார பகுதிகளில் வாழும் மக்கள் காட்டு பகுதிகளில் தங்களது ஆடு, மாடுகளை ஓட்டி செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
தற்போது சிறுத்தைகளை விரட்ட கூடுதலாக சில இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி நிறுவ தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் கூடுதலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி நிறுவப்படும்.
80 கிராமங்களில் எருது விடும் விழா:
வேலூா் மாவட்டத்தில் இதுவரை 80 கிராமங்களுக்கு எருது விடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி யாரும் எருதுவிடும் விழா நடத்த கூடாது. புதிதாக நடத்த விரும்புவோா் விண்ணப்பங்களை அளித்தால் பரிசீலனை செய்யப்படும். இம்மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு 90 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது. அதேசமயம், இலவச வேட்டி சேலைகள் இதுவரை 44 சதவீதம்தான் வழங்கப்பட்டுள்ளது. மாத இறுதிக்குள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
விழாவில் அறிவியல் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.யுவராஜன், கே.தினகரன், பதிவாளா் செந்தில் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...