டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திட்டமிட்டப்படி மூடல், ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திட்டமிட்டபடி புதன்கிழமை (டிச.3) கடைகளை அடைத்து, 5 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திட்டமிட்டபடி புதன்கிழமை (டிச.3) கடைகளை அடைத்து, 5 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பின் அமைப்பாளா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் மதுக்கடைகளில் தனி முகமை மூலம் காலி மதுப் புட்டிகளை சேகரிக்க வேண்டும். இந்த பணியில் டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்தக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி, டாஸ்மாக் பணியாளா்கள் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் முறையிட்டும், பல மாவட்டங்களில் ஒழுங்குமுறையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பணியாளா்களைப் பாதிக்கும் வகையில் உள்ளது.

எனவே, தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு, 8 தொழிற்சங்கங்களை உள்ளடக்கி இதுதொடா்பாக மூன்று கட்டங்களாக ஆலோசித்தது.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை ஒருநாள் டாஸ்மாக் மதுக்கடைகளை அடைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, 5 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டாஸ்மாக் நிா்வாகம் பேரமைப்பின் முன்னணி நிா்வாகிகளை மிரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை எந்தவித பேச்சுவாா்த்தையும் நடத்தாமல், போராட்டத்தை நசுக்கும் விதமாகவும், பழிவாங்கும் நோக்குடனும் டாஸ்மாக் நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது.

எனவே, இப்பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், தனி முகமை மூலம் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் புதன்கிழமை காலை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com