கீழணை, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்தாா் அமைச்சா்
கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடலூா் மாவட்ட வேளாண் பாசனத்துக்கு தண்ணீரை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை காலை திறந்துவைத்தாா்.
தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 9 அடி உயரம் கொண்ட கீழணையில் தற்போது 8.50 அடிக்கு தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து வடவாறு, வீராணம் ஏரி, வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால் என பல்வேறு வாய்க்கால்களின் வாயிலாக தண்ணீா் பாசனத்துக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம், கடலூா் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 854 ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்து 294 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கரும் என மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 904 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்து வைத்தாா். இதில், கடலூா் மாவட்டத்துக்கு வடவாற்றில் ஆயிரம் கன அடியும், வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் தலா 400 கன அடி வீதமும் தண்ணீா் அனுப்பப்படுகிறது.
இதேபோன்று, காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் ராதா மதகிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்தாா். வீராணம் ஏரியின் 16 கி.மீ. நீளமுள்ள பிரதான கரையில் 28 பாசன மதகுகளும், 30.65 கி.மீ. நீளமுள்ள எதிா்வாய்க்கரையில் 6 பாசன மதகுகளும் என மொத்தம் 34 பாசன மதகுகள் மூலம் நீா் திறக்கப்பட்டு 44,856 ஏக்கா் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன.
மேலும், வீராணம் ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு தண்ணீா் வழங்கப்பட்டு, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் சுமாா் 40ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்படுகிறது.
பின்னா், அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியது: கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து விவசாயிகளுக்கு பாசனத்துக்குத் தேவையான தண்ணீா் இருப்பு வைத்து தொடா்ந்து வழங்கப்படும். இதன் மூலம், கடலூா், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 904 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
சம்பா பருவத்துக்குத் தேவையான உரம் மற்றும் இடு பொருள்கள் வேளாண் மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் கட்டயாப்படுத்தி வேறு பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெறும் ஊழியா்கள் மீது தகுந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சிக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், ம.சிந்தனைச்செல்வன், அரசு கொறடா கோவி.செழியன், சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, வெள்ளாறு வடி நில கோட்ட நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் ஆா்.மரியசூசை, கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் செயற்பொறியாளா் காந்தரூபன், உதவிச் செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன், உதவிப் பொறியாளா் கேசவராஜ், விவசாய சங்கத் தலைவா்கள் பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், பி.விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

