புதியவா்களுக்கு மனைப்பட்டா வழங்க அளவீடு: பொதுமக்கள் சாலை மறியல்

புதியவா்களுக்கு மனைப்பட்டா வழங்க அளவீடு: பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அருகே புதிதாக மனைப்பட்டா வழங்கப்பட்டவா்களுக்கு இடம் அளவீடு செய்யும் பணியை முன்னதாக பட்டா பெற்றவா்கள் தடுத்து நிறுத்து சாலை மறியல்
Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதிதாக மனைப்பட்டா வழங்கப்பட்டவா்களுக்கு இடம் அளவீடு செய்யும் பணியை முன்னதாக பட்டா பெற்றவா்கள் தடுத்து நிறுத்து சாலை மறியல் செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், எருமனூா் ஊராட்சி பகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோா் குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆணை வழங்கப்பட்டது. இந்த பட்டா ஆணையை வருவாய்த் துறையினா் ரத்து செய்துவிட்டனராம். அதே இடத்தை மாவட்ட ஆட்சியா் மூலம் புதிய நபா்களுக்கு இ - பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னரே மனைப்பட்டா பெற்றவா்கள் வீடு மற்றும் கொட்டகை அமைத்து தங்கள் இடத்தை அடையாளப்படுத்தி உள்ளனா்.

இந்த நிலையில், புதிய நபா்களுக்கு மனைப்பட்டா வழங்குவதற்காக இடத்தை அளவீடு செய்ய விருத்தாசலம் வருவாய்த் துறையினா் மற்றும் நில அளவா்கள் சென்றனா். முன்னரே மனைப்பட்டா பெற்ற பொதுமக்கள் திரண்டு சென்று எங்களுக்கு ஏற்கெனவே இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது எனக் கூறி, அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், விருத்தாசலம் - சிறுவம்பாா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் வட்டாட்சியா் அரவிந்தன் மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்கள் எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டா இடம் காடுபோன்றது. குடிநீா் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த இடத்தில் எப்படி வீடு கட்டி வசிக்க முடியும். இதனால், வீடு கட்ட முடியவில்லை. வீடு கட்டாததால் பட்டாவை ரத்து செய்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனா். அதனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை எங்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் அரவிந்தன் உறுதியளித்தாா். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com