இன்று கடலூரில் அரசுப் பொருட்காட்சி தொடக்கம்
கடலூா், மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த பொருட்காட்சி தொடா்ந்து 40 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
கடலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடா்பு துறை இணைந்து நடத்தும் அரசுப் பொருட்காட்சி அரங்குகளை ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் முன்னிலையில், மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனா்.
கண்காட்சியில் அரசின் பல்வேறுத் துறைகளின் சாா்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு அத்துறைகளின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கப்படவுள்ளன. பொருட்காட்சிக்கு வருகை தரும் பெரியவா்கள் முதல் குழந்தைகள் வரையில் அனைவரையும் மகிழ்விக்கும் ஜெயின்ட் வீல், டோரா டோரா, ரயில், சறுக்கல், போட்டிங், ராட்டினங்கள், முப்பரிமான அனிமல் வோல்டு காட்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறவுள்ளன. மேலும், தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதையொட்டி மஞ்சக்குப்பம் மைதானத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
