/

காங்கிரஸ் அரசு மக்களுக்கானது என்பது நிரூபணம்: புதுவை விடுதலை நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேச்சு

காங்கிரஸ் அரசு மக்களுக்கானது என்பது புதுவையில் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் நிரூபணமாகி உள்ளது என, அந்த மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:54 am

தினமணி

காங்கிரஸ் அரசு மக்களுக்கானது என்பது புதுவையில் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் நிரூபணமாகி உள்ளது என, அந்த மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுவையின் விடுதலை நாளையொட்டி புதன்கிழமை கடற்கரையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடி ஏற்றிவைத்து காவல் துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
 விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 பிரிட்டிஷார் ஆதிக்க சக்தியாக இந்தியாவில் வளர்ந்த நிலையில், பிரெஞ்சுக்காரர்களும் பல்வேறு பகுதிகளில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைந்தனர். தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், மேற்கு வங்கத்தில் சந்திரநாகூர் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். 1950}ஆம் ஆண்டு சந்திரநாகூர் மேற்கு வங்கத்துடன் இணைந்தது.
 ஆனால், நாம் வீரம் செறிந்த போராட்டத்தின் மூலமாக 1954}ஆம் ஆண்டு, நவம்பர் 1}ஆம் தேதி விடுதலை பெற்றோம். இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடும் வகையில், பிரெஞ்சுக்காரர்கள் எந்த இடத்தில் கப்பல் ஏறிச் சென்றார்களோ அதே இடத்தில் நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளோம்.
 புதுவையில் நடைபெற்ற பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து அரசியல் தலைவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பல காலகட்டங்களில் போராட்டம் நடத்தினர். காந்தியடிகளும், நேருவும் புதுவைக்கு வந்து மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டினர்.
 முதலில் ஏனாமிலும், பின்னர், மாஹேயிலும் மக்கள் போராட்டத்தால் பிரெஞ்சு நிர்வாகிகள் வெளியேறினர். புதுச்சேரி, காரைக்காலில் பின்னர் வெடித்த போராட்டங்களால் கீழூரில் பிரதிநிதிகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரெஞ்சிந்திய பகுதி இந்தியாவுடன் இணைவது உறுதி செய்யப்பட்டது. 1954 நவம்பர் 1}ஆம் தேதி புதுவை சுதந்திர பூமியானது.
 பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாம் நிறைய இழந்திருக்கிறோம்.
 அவர்கள் ஆதிக்க சக்தியாக இருந்தாலும், அவர்களிடம் பல்வேறு அனுபவங்களை பெற்றோம். இந்தியாவின் கீழ் வந்த புதுவை, பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளன. குறிப்பாக, மதச்சார்பற்ற ஆட்சி மத்திய, மாநிலத்தில் இருந்த போது இவை நிகழ்ந்தன.
 காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பணிகளால் புதுவை கல்விக் கேந்திரமாக திகழ்கிறது. உயர் கல்வியில் நாட்டிலேயே 5}வது இடத்தில் உள்ளது. 2017}18}இல் 1180 இளநிலை, முதுநிலை சேர்க்கை இடங்கள், அரசு மற்றும் கூட்டுறவு சங்க கலைக் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டு மாணவர்கள் பயில வகை செய்யப்பட்டது. குறிப்பாக, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 566 கூடுதல் இடங்களுடன் ஷிப்ட் பாட முறை அறிமுகம் செய்யப்பட்டது.
 பெங்களூர் சத்தியசாய் அறக்கட்டளை உதவியோடு 20,000 ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு சூடான பால், பிஸ்கெட் தரப்படுகிறது. மதிய உணவுத் திட்டம் மெருகேற்றி செயல்படுத்தப்படும்.
 ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதாரச் சேவையில் புதுவை நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
 குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில் 2}ஆம் இடத்தை பெற்றுள்ளோம்.
 ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ் ரூ.107 கோடியை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 வாரம் முழுமைக்குமான சுற்றுலா தலமாக புதுச்சேரியை மாற்றவும், மாஹே, ஏனாம், காரைக்காலிலும் சுற்றுலாவை மேம்படுத்த, மத்திய அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்படும்.
 புதுவை நகரம் இன்றும் தனது பாரம்பரியம், வரலாற்றுச் சின்னங்களை காத்து வருகிறது.
 நலத் திட்டங்கள் செயல்படுத்துவதிலும், மாநில வளர்ச்சியிலும் எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அவைகளை எதிர்கொண்டு அனைவரது நலனைப் பேணிக் காப்பதில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிரூபித்துக் காட்டியுள்ளோம்.
 சட்டம்}ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதின் மூலம் 13 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன என்றார் நாராயணசாமி.
 சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், அமைச்சர் ஷாஜஹான், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், பாலன், தில்லி பிரதிநிதி ஜான்குமார், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, டிஜிபி கெüதம் மற்றும் அரசு செயலர்கள், அதிகாரிகள், கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.