ஏஎப்டி ஆலையை மூட ஆளுநரும், அரசுமே காரணம்: அதிமுக குற்றச்சாட்டு
புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலை மூடும் முடிவுக்கு ஆளுநர் கிரண் பேடியும், புதுவை அரசுமே காரணம் என்று அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.


புதுச்சேரி: புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலை மூடும் முடிவுக்கு ஆளுநர் கிரண் பேடியும், புதுவை அரசுமே காரணம் என்று அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து புதுவை பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, புதியதாக ஒரு தொழிற்சாலையையும் கொண்டுவரவில்லை. ஏற்கெனவே செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளையும் மூடி, அதில் பணிபுரிந்த தொழிலாளர்களை வேலைவாய்ப்பு அற்றவர்களாகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
அரசு சார்பு நிறுவனங்களில் திட்டமிட்டு ஒரு தேக்க நிலையை உருவாக்கி அதில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தி பல அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிய, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏஎப்டி ஆலையை மூட அரசாணை பிறப்பித்து உள்ளது.
அதன்படி, தொழிலாளர்கள் எத்தனை ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் ஒரு மாத ஊதியம் மட்டுமே இழப்பீடாக தரப்படும். அதேநேரத்தில் விருப்ப ஓய்வு சட்டப்படி இழப்பீடு வழங்குவதாக இருந்தால் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 25 நாள் ஊதியமும், அந்த நிறுவனம் இருந்தால் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொழிலாளர்கள் பணிபுரிவார்களோ அத்தனை ஆண்டுகளுக்கு ஒரு ஆண்டுக்கு 35 நாள் ஊதியமும் கணக்கிட்டுத்தர வேண்டும்.
அரசு சார்பு நிறுவனங்களை நடத்துவதற்காக விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த 2018 ஜனவரி மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கையை அதிமுக 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் சமர்ப்பிக்கவில்லை. துணை நிலை ஆளுநரும், புதுவை அரசும் இணைந்து திட்டமிட்டு சதி செய்து ஆலையை மூடுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை ஆலையை நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியே கடந்த பேரவைத் தேர்தலில் மத்திய அரசிடம் ரூ.500 கோடி நிதியை பெற்று ஆலையை நவீனப்படுத்தி இயக்குவோம் என்று தான் அறிவித்தது. அதை முதல் பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது. முடியாத சூழல் ஏற்பட்டால் விருப்ப ஓய்வு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் இந்த நோட்டீஸ் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்தை அறிய உடனடியாக பேரவையை கூட்ட வேண்டும். ஆலையை மூடுவதற்கான முடிவு அமைச்சரவையில்தான் எடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு இல்லாமல் ஆலையின் நிர்வாக இயக்குநரே முடிவு எடுத்திருந்தால் அவர் மீது உரிமை மீறல் புகார் அளிக்க வேண்டும்.
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க, கட்சியின் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம் என்றார் அன்பழகன்.
பேட்டியின்போது அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உடன் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...