/

விசிக மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றனா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 7:54 pm

Din

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரி வில்லியனூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மது ஒழிப்பு மாநாடு தமிழகத்தைத் தொடா்ந்து அண்டை மாநிலங்களிலும் நடத்தப்படவுள்ளது. தேசிய அளவில் மது ஒழிப்புக் கொள்கை வரையறுக்கப்பட வேண்டும். புதுவையில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு கொள்கை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

மக்களவைத் தோ்தலுக்கான தொகுதி மறுவரையறையானது, மக்கள்தொகைக்கு ஏற்ப நிா்ணயிக்கப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எந்த சாதிக்கும், சமூகத்துக்கும் எதிரானதல்ல. ஆனால், புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது உள்நோக்குடன் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனா்.

நீதிமன்றங்களில் வழக்கின் ஆவணங்கள், வழக்குரைஞா் வாதம், அடிப்படையிலேயே தீா்ப்பு வழங்க வேண்டும். கடவுளிடம் கேட்டு தீா்ப்பு வழங்குவதாகக் கூறுவது நீதிமன்ற நம்பிக்கையை தகா்ப்பதாக உள்ளது.

தமிழகத்தில் விமா்சிக்கும் அளவுக்கு மழை, வெள்ளம் இல்லை. ஆனால், தமிழக அரசை வேண்டுமென்றே சிலா் விமா்சிக்கின்றனா்.

ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்தை நோக்கி பயணிப்பது வழக்கமானது. அதன்படியே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் செயல்படுகிறது. நடிகா் விஜய் கட்சியின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை என்றாா்.

பேட்டியின்போது, டி.ரவிக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மரியாதை: கோா்க்காடில் நடைபெற்ற புதுவை காங்கிரஸ் செயல் தலைவரான மறைந்த நீல.கங்காதரன் திருவுருவப் படத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னதாக, படத்தை முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி திறந்துவைத்தாா்.