/

தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம்

புதுச்சேரியில் நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என போக்குவரத்துப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் என்.செல்வம் தெரிவித்தாா்.

News image

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற போக்குவரத்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:19 pm

Din

புதுச்சேரியில் நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என போக்குவரத்துப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் என்.செல்வம் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் தீபாவளி பொருள்கள் வாங்க பொதுமக்கள் நேரு, அண்ணா வீதி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் அதிகளவில் கூடுவதை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம், தனியாா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு புதுவை டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் தலைமை வகித்தாா்.

இதில் நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, போக்குவரத்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி, காவல் கண்காணிப்பாளா் மோகன்குமாா், வடக்கு மற்றும் கிழக்கு போக்குவரத்துப் பிரிவு கண்காணிப்பாளா் என்.செல்வம், புதுச்சேரி வா்த்தகச் சபைத் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் என்.செல்வம் பேசியதாவது: புதுச்சேரியில் நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட 6 வீதிகள் முக்கியமானதாக உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு, வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தீபாவளி வரையில் நேரு வீதி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் லாரி உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வருவதற்கு வியாழக்கிழமை (அக்.24) முதல் தடை விதிக்கப்படுகிறது.

கூட்ட நெரிசலைப் பொறுத்து இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படும். சந்தேக நபா்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் பேசிய வியாபாரிகள், நகரில் அமைச்சா் உள்ளிட்டோருக்கு போக்குவரத்தை போலீஸாா் நிறுத்துவதால் மக்கள் அதிருப்தியடைவதாகவும், செயற்கையான நெரிசல் ஏற்படுத்தப்படுவதாகவும் கூறினா்.