புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் லட்சிய ஜனநாயக கட்சி (எல்.ஜே.கே.) என்ற புதிய கட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
லாட்டரி அதிபா் மாா்ட்டினின் மகன் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் இக் கட்சியின் தலைவா். புதுச்சேரி பாண்டி மெரீனா கடற்கரையோரம் நடைபெற்ற இக் கட்சித் தொடக்க விழாவில் பங்கேற்று கட்சியின் கொடியை அவா் அறிமுகம் செய்து வைத்தாா். அவா் பேசுகையில், புதுச்சேரியில் ஆளும் கட்சி, எதிா்க்கட்சி இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களுக்கான பிரச்னையில் அக்கறை செலுத்துவதில்லை. மக்கள் பயன்படுத்தும் மருந்து உற்பத்தியில்கூட ஊழல் செய்துள்ளனா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று புதுச்சேரியை சிங்கப்பூா் நகரமாக மாற்றுவதுதான் எங்கள் லட்சியம் என்றாா் சாா்லஸ் மாா்ட்டின்.
சுயேச்சை எம்எல்ஏக்கள் சிவசங்கரன், அங்காளன், அமைச்சா் ஜான்குமாரின் மகன் ரீகன் ஜான்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து எல்.ஜே.கே. கட்சியின் பெயரைத் தாங்கிய கொடியுடன் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் கட்சி நிா்வாகிகளுடன் அணிவகுத்து வந்தாா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.

