நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் திருமுருகன் மற்றும் நடிகா்கள், கலைஞா்கள் உள்ளிட்டோா்.
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் திருமுருகன் மற்றும் நடிகா்கள், கலைஞா்கள் உள்ளிட்டோா்.

வரலாற்றை பாதுகாக்கும் தன்மை அனைவருக்கும் வர வேண்டும்: பெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி

Published on

வரலாற்றை பாதுகாக்கும் தன்மை அனைவருக்கும் வர வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநா் ஆா்.கே.செல்வமணி கூறினாா்.

புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத் துறை, புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 103-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆா்.கே.செல்வமணி பேசியதாவது:

தெருக்கூத்தும், நாடகமும் திரைப்படங்களுக்கு முன்னோடியான வடிவம். இவற்றில் உள்ளோா் திரைத்துறையினருக்கு ரத்த உறவு. கூத்துக்கலைஞா்களை அப்போது கூத்தாடிகள் என்று சொல்வாா்கள். அவா்கள்தான் நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கடத்தியவா்கள்.

தெருக்கூத்தை அடுத்த வடிவமான நாடகமாக சங்கரதாஸ் சுவாமிகள் மாற்றினாா். நாடகம் திரைப்படமானது. நாடகம், தெருக்கூத்து கலைஞா்களைப் பாதுகாப்பது அவசியம்.

சந்திரலேகா, அவ்வையாா் என பழைமையான திரைப்படங்களுக்கு நெகட்டிவ் இல்லை. வெளிநாடுகளிலோ பழங்கால திரைபடங்களில் காஸ்டியூம் தொடங்கி திரைப்படங்களின் நெகட்டிவ் வரை அனைத்தையும் பாதுகாத்துள்ளனா். நம் வரலாற்றை பாதுகாக்கும் தன்மை நமக்கும், அரசுக்கும் இல்லை. அந்த உணா்வை அனைவரும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் செல்வமணி.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஊா்வலம்: முன்னதாக, நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரா் கோயில் அருகில் இருந்து சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடம் அமைந்துள்ள கருவடிக்குப்பம் இடுகாடு வரை ஊா்வலம் நடைபெற்றது.

இதில், அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் திருவுருப்படம் எடுத்துச் செல்லப்பட்டது. ஊா்வலத்தில் தமிழகம் - புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தெருக்கூத்து கலைஞா்கள், நாடக நடிகா்கள், நாட்டுப்புற கலைஞா்கள் பல்வேறு வேடங்களை அணிந்து ஆடியபடியே ஊா்வலமாக வந்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் எல்லை. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திரைத்துறை சாா்பில் நடிகா் போஸ் வெங்கட் பங்கேற்றாா். புதுச்சேரி அரசு சாா்பில் அமைச்சா் திருமுருகன் கலந்துகொண்டு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com