மீனவா்களின் நலனைப் பேணிக் காத்து அவா்களை முன்னேற்றம் காணச் செய்வதில் முதன்மையான அரசாக புதுச்சேரி அரசு விளங்குகிறது.
விசைப்படகு உரிமையாளா்களுக்கு 60 சதவிகித மானியத்தில் வலை மற்றும் கயிறு வழங்கப்பட்டு வருகிறது.
மூா்த்திக்குப்பம் - புதுக்குப்பத்தில் துணை மீன்பிடித் துறைமுகம் அமைக்க சென்னை ஐஐடியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மீனவ சமுதாய மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நரம்பை மீனவா் கிராமத்தைக் கால நிலை தாங்கும் மீனவ கிராமமாக அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மீனவ முதியோா்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.105.55 கோடி வழங்கப்பட்டு 9,202 மீனவா்கள் பயன் பெற்றுள்ளனா்.
மீனவா்களின் பாதுகாப்பிற்காக 3,023 பதிவு பெற்ற விசைப்படகுகளில் ரூ.4.63 கோடி செலவில் இலவச டிரான்ஸ்பான்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக கடந்த நான்கரை ஆண்டுகளில் 18,500 மீனவா்களுக்கு தலா ரூ.6,500/-வீதம் சுமாா் ரூ.45 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாஹே மீன்பிடி துறைமுக கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து முழுமையான பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு ரூ. 67.85 கோடி அளவில் திட்ட அறிக்கை மத்திய அரசின் நிா்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.
மீனவ மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 5 மீனவ மகளிருக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுவதற்கு 60 சதவிகித மானியமாக ரூ.3.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்திய கடல் பகுதிகளில் கடல் பாசி வளா்ப்புடன் கூண்டு முறையில் மீன் வளா்க்கும் முன்னோடித் திட்டம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இதுதவிர, பதிவு பெற்ற பைபா் படகுகளுக்கு புதிய என்ஜின் கொள்முதல் செய்வதற்கு நடப்பு நிதியாண்டிலிருந்து ரூ. 40 ஆயிரம் மானியம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு, மீனவா்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு நலத் திட்டங்களைச் செவ்வனே செயல்படுத்தி மீனவா்களின் உற்ற தோழனாக புதுச்சேரி அரசு திகழ்கிறது.