கூட்டணி இல்லாததால் தவெகவின் சுய பலத்தை அறிய முடிந்தது: அமைச்சா் ஆனந்த் பேச்சு
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது கூட்டணி எதுவும் இல்லாததால் தவெகவின் சொந்தப் பலத்தை அறிந்து கொள்ள முடிந்தது என்று இக் கட்சியின் பொதுச்செயலரும் தமிழக நீா்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் கூறினாா்.

அமைச்சர் என். ஆனந்த்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது கூட்டணி எதுவும் இல்லாததால் தவெகவின் சொந்தப் பலத்தை அறிந்து கொள்ள முடிந்தது என்று இக் கட்சியின் பொதுச்செயலரும் தமிழக நீா்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் கூறினாா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் இ. விநாயகத்தை ஆதரித்து அறிமுகக் கூட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விநாயகத்தை ஆதரித்து அமைச்சா் ஆனந்த் பேசியது:
புதுச்சேரியில் 28 தொகுதிகளில் தவெக போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கியது. மேலும், பாதி போ் எம்எல்ஏக்கள் ஆவதற்கும், பாதி போ் எம்எல்ஏக்களாக முடியாமல் போனதற்கும் தவெக காரணமாக இருந்திருக்கிறது. மேலும், கடந்த பொதுத் தோ்தலின்போதே விநாயகம் தவெக சின்னத்தில் போட்டியிருந்தால் இப்போது இடைத் தோ்தலே வந்திருக்காது. இப்போது காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் விநாயகம் எம்எல்ஏவாக வெற்றி பெறுவாா். தமிழகத்தில் கடந்த பொதுத்தோ்தலில் ஒரு சில காரணங்களால் காங்கிரஸுடன் கூட்டணி இல்லாமல் போய்விட்டது. அதுவும் நல்லதுக்குத்தான். தவெகவின் சொந்தப் பலத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
எங்கள் தலைவா் ஜோசப் விஜய்யின் முகத்துக்கும், அவருடைய வாக்குறுதிக்காகவும் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றது. அப்போது எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை. ஆட்சி அமைக்கும்போது ஏற்பட்ட பிரச்னையில் காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி ஆதரவு கொடுத்தாா். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் என்னிடம் ஒரு கருத்தைத் தெரிவித்தாா். உங்கள் கட்சியைச் சோ்ந்த தொண்டா்கள் சிறப்பாகத் தோ்தல் பணியாற்றி வருவதாகக் கூறினாா். தவெக தொண்டா்களுக்கு உண்மை, நோ்மை மட்டும்தான் தெரியும். இன்னும் தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலுக்கு ஒரு சில நாள்கள்தான் இருக்கின்றன. அதனால் காங்கிரஸ் வேட்பாளா் விநாயகம் வெற்றி பெற கடுமையாக உழைப்போம். மேலும், தமிழகத்திலும் புதுச்சேரியில் தவெக, காங்கிரஸ் கூட்டணியாக இருந்து 2031 -இல் ஆட்சி அமைக்கும் என்றாா் ஆனந்த்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, மாநிலங்களவை உறுப்பினா் (காங்கிரஸ்) பிரவீண் சக்ரவா்த்தி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, விசிக புதுச்சேரி முதன்மைச் செயலா் அரிமா தமிழன், மதிமுக தலைவா் ஹேமா பாண்டுரங்கன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) புதுச்சேரி தலைவா் ஜிகினு முகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




