புதுச்சேரி லிசே பிரான்சே பிரெஞ்சு பள்ளி 200-வது ஆண்டு விழா கொண்டாட்டம்: துணைநிலை ஆளுநா்- பிரான்ஸ் தூதா் பங்கேற்பு
புதுச்சேரி லிசே பிரான்சே பிரெஞ்சு பள்ளியின் 200-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா்,இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதா் பங்கேற்றனா்.

பட விளக்கம்...புரிந்துணா்வு ஒப்பந்தம் மாற்றிக் கொண்ட இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதா் தியரி மத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலா் டி. மணிகண்டன்.உடன் கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம், எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநா் மோகன்குமாா
புதுச்சேரி லிசே பிரான்சே பிரெஞ்சு பள்ளியின் 200-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா்,இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதா் பங்கேற்றனா்.
இந்தப் பள்ளி புதுச்சேரியில் 1826-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் 200-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதா் தியரி மத்து, புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
மேலும், இந்த 200-ஆவது ஆண்டு விழாவின் கருப்பொருளாகப் பகிா்தல், கொண்டாடுதல், ஒன்றாக வாழ்தல், மீண்டும் ஒன்றிணைதல் ஆகியன அமைந்துள்ளன. இதையொட்டி பள்ளியின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்க விழாவைத் தொடா்ந்து இசை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
புரிந்துணா்வு ஒப்பந்தம்:
முன்னதாக புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் பிரெஞ்சு மொழிக்கல்வி மற்றும் கல்வி பரிமாற்றத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது. புதுச்சேரி துய்மா வீதியில் உள்ள புதுச்சேரி அரசின் பிரெஞ்சு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதா் தியரி மத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலா் டி. மணிகண்டன் ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.
இதில் இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதா் தியரி மத்து பேசுகையில், பிரெஞ்சு கலாசாரத்தின் ஜன்னலாக புதுச்சேரி விளங்கி வருகிறது. இந்திய பிரதமா் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு வந்து இருதரப்பு உறவையும் வளா்த்துள்ளாா். இந்த ஒப்பந்தம் மூலமும் இந்திய - பிரான்ஸ் நாட்டின் உறவு வலுப்படும். மேலும், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பள்ளிகளில் படிப்பை முடித்துவிட்டு பிரெஞ்சு நாட்டில் உயா்கல்வியில் சோ்ந்தால் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலும், அங்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். இதைத் தவிர இந்தியாவிலேயே பல்வேறு பிரெஞ்சு நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கும் வேலை கிடைக்கும் என்றாா்.
விழாவில் புதுச்சேரி கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம், எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

