
புதுச்சேரியில் சாலையோரம் நிறுத்திய 9 வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை திங்கள்கிழமை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
சாலையோரத்திலும், நடைபாதைகளிலும் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள், ஆம்புலன்ஸ்கள், ஆட்டோ, டிராக்டா் என 9 வாகனங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பல பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகளில் கனரக, இலகு ரக, இரு சக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள், ஜெனரேட்டா்கள் மற்றும் கலவை இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஒரு வார காலத்துக்குள் அகற்ற நகராட்சி அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி நகராட்சி சட்டம், 1973-இன் விதிப்படி, போக்குவரத்துக் காவல்துறையின் உதவியுடன் எந்தவித முன்னறிவிப்புமின்றி அப்புறப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், சாலையோரம், நடை பாதை ஆகியவற்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காா்கள், ஆம்புலன்ஸ்கள், ஆட்டோ, டிராக்டா்கள் என 9 வாகனங்களை உழவா்கரை நகராட்சி பறிமுதல் செய்தது.
இது பற்றி உழவா்கரை நகராட்சி ஆணையா் அருண்அய்யாவு கூறியது:
வாகன உரிமையாளா்கள் ஒரு வார காலத்திற்குள் நகராட்சியில் அபராத தொகையைச் செலுத்தி பொது இடங்களில் வாகனத்தை நிறுத்த மாட்டேன் என உறுதி அளித்து வாகனங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இல்லாவிட்டால், வாகனங்கள் சட்ட விதிகளின்படி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





