விழுப்புரத்தில் செப்.15-இல் திமுக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் தலைமையேற்கும் கட்சியின் முதல் விழா
விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற சனிக்கிழமை (செப்.15) திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற சனிக்கிழமை (செப்.15) திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் விழா என்பதால், ஒரு லட்சம் தொண்டர்கள் வரை திரள்வார்கள் என்று, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி தெரிவித்தார்.
இதுகுறித்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: திமுக சார்பில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு, முப்பெரும் விழா விழுப்புரத்தில் நடைபெறும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, வருகிற செப்.15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விழுப்புரம் நகராட்சி மைதானம் அண்ணா திடலில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப் பிறகு அவர் தலைமையேற்கும் கட்சியின் முதல் விழா இதுவாகும்.
விழுப்புரத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதன் முதலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதையடுத்து, 2006-இல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. இதற்கடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா விழுப்புரத்தில் நடைபெறுகிறது. இதனால், பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் திமுக ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்னோட்டமாக இந்த விழா அமையும். விழாவை மாநாடு போல நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், தமிழகம் முழுவதிலிருந்து கட்சியினர் ஒரு லட்சம் பேர் வரை திரண்டு வருவர்.
விழாவுக்காக, செப்.15-ஆம் தேதி, சென்னையிலிருந்து புறப்பட்டு வரும் மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி அருகே பகல் 11 மணியளவில் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு நகராட்சித் திடலில் தொடங்கும் முப்பெரும் விழாவுக்கு பேராசிரியர் க.அன்பழகன் தலைமை வகிப்பார். தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார். பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
விழாவில், மும்பை வி.தேவதாசனுக்கு பெரியார் விருதும், பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதும், குத்தாலம் பி.கல்யாணத்துக்கு கலைஞர் விருதும், புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருதும், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார் க.பொன்முடி.
மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






