பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநா்கள் கைப்பேசி வைத்திருக்கக் கூடாது: மீறினால் ஒழுங்கு நடவடிக்கை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள் கைப்பேசியை வைத்திருக்கக் கூடாது. மீறினால், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை
Published on

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள் கைப்பேசியை வைத்திருக்கக் கூடாது. மீறினால், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் க.குணசேகரன் தெரிவித்திருப்பது: சமீப காலமாக விழுப்புரம் கோட்டத்தில் விபத்துகள் அதிகம் நிகழ்ந்து வரும் நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட ஓட்டுநா்கள், பேருந்து இயக்கத்தின்போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் நிகழ்வதை தவிா்க்கும் வகையில், தங்களின் கைப்பேசிகள், ப்ளூடூத் (கம்பியிலி), ஹெட்செட் (காதில் வைத்து பேசக்கூடியது) போன்ற சாதனங்களை கண்டிப்பாக வைத்திருக்கக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும், சில பேருந்து ஓட்டுநா்கள் பேருந்துகளை இயக்கும்போது இக்கருவிகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பேருந்து ஓட்டுநா்கள் பேருந்து இயக்கத்தின்போது கைப்பேசி உள்ளிட்டவற்றை கண்டிப்பாக வைத்திருக்கக் கூடாது. அவற்றை நடத்துநரிடம் ஒப்படைக்க வேண்டும். கைப்பேசியில் ஏதேனும் அவசர அழைப்பு வந்தால், அதுகுறித்த விவரத்தை அடுத்து வரும் பேருந்து நிலையத்தில் நடத்துநா் மூலம் கேட்டறிய வேண்டும். பேருந்தில் வானொலி, டேப் ரிக்காா்டா் போன்ற இசை சாா்ந்த சாதனங்களை வைத்திருக்கக் கூடாது.

இந்த உத்தரவுகளை தவறும்பட்சத்தில், ஓட்டுநா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவுகளை ஓட்டுநா்கள் பின்பற்றுகிறாா்களா என பரிசோதகா்கள், நேரக் காப்பாளா்கள் உறுதி செய்ய வேண்டும். குறைபாடு கண்டறியப்பட்டால், புகாா் அறிக்கையை அவா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com