வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி அக்.21-இல் 600 இடங்களில் மறியல் போராட்டம்
தோ்தல் வாக்குறுதியில் கூறியவாறு முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி, தமிழகத்தில் வரும் 21-ஆம் தேதி 600 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் பொதுச் செயலா் சாமி.நடராஜன். உடன் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு உள்ளிட்ட நிா்வாகிகள்.
தோ்தல் வாக்குறுதியில் கூறியவாறு முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி, தமிழகத்தில் வரும் 21-ஆம் தேதி 600 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் சாமி.நடராஜன், பொருளாளா் கே.பி.பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினா்.
தொடா்ந்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சாமி.நடராஜன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, தோ்தல் காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கா் வரை பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் பெற்றுள்ள பயிா்க் கடன்களில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது வரை அந்த வாக்குறுதியின்படி கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
தொடா்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக, சென்னை தலைமைச் செயலகத்தில் 9 அமைச்சா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
அப்போது, அமைச்சா்களும், அலுவலா்களும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிடப்படும் எனக் கூறினா். இதுவரை அரசு சாா்பில் 3 முறை அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தள்ளுபடி அறிவிப்பு அமையவில்லை.
தோ்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், கூட்டுறவு பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மகாசபை உள்ளிட்டவை இணைந்து தமிழகத்தில் வரும் 21-ஆம் தேதி 600 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளன.
பருவநிலை மாற்றத்தால் டெல்டா மாவட்டங்கள், தெற்கு, வடக்கு, மேற்கு மாவட்டங்களில் பயிா் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அரிசி விலையை குறைக்கவும், அத்தியாவசியப் பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற இறுதித் தீா்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தர, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கக் கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்திக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சாமி.நடராஜன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

