முகப்பு
பெங்களூரு

காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட பாஜக முயற்சி

மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயற்சித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயற்சித்தனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு பிரச்னையைத் தீர்ப்பதாக அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்ற பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பாவை வலியுறுத்தி, வட கர்நாடக விவசாயிகள் கடந்த நான்கு நாள்களாக பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தின் முன் தொடர் தர்னா நடத்தினர். 
இந்த விவகாரத்தில் தன்னால் இயன்றதை செய்துள்ளதாக எடியூரப்பா நேரில் தெரிவித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் செப்.26-ஆம் தேதி போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தின் போது நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 
பாஜக முற்றுகை
இதனால் ஆவேசமடைந்த பாஜகவினர், பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட முயன்றனர். பாஜக எம்பி ஷோபாகரந்தலஜே தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான பாஜகவினர், கட்சியினர் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு குயின்ஸ் சாலையில் நுழைய முயன்றனர். 
மகதாயி விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா அரசியல் நடத்துவதாகவும், விவசாயிகள் என்ற போர்வையில் காங்கிரஸ் தொண்டர்களைத் தூண்டிவிட்டு பாஜக அலுவலகம் முன் போராட்டம் நடத்தியதாகவும் குற்றம்சாட்டியதோடு, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கட்டா சுப்ரமணிய நாயுடு, எம்.எல்.ஏ.க்கள் விஸ்வநாத், அஸ்வத்நாராயணா, பெங்களூரு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பத்மநாபரெட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஊர்வலமாக வந்த பாஜகவினரை ஜஸ்மாபவன் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். 
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பாஜகவினர் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை திரண்ட காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பெங்களூரு நகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான ரகுவீர கெளடா, மாணவர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 
100 அடி இடைவெளியில் நின்று கொண்டு இரு தரப்பினரும் பரஸ்பரம் விமர்சித்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. தடுப்புகளை மீறி காங்கிரஸ் அலுவலகம் நோக்கி நகர முயன்ற பாஜகவினரைத் தடுத்து நிறுத்த போலீஸார் திணறினர். 
போலீஸாருடன் ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட பாஜக முன்னணியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் அலுவலகத்தின் அருகே செல்ல அனுமதிக்குமாறு பாஜகவினர் விடுத்த வேண்டுகோளை போலீஸார் நிராகரித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. 
இரட்டை நிலைப்பாடு
அப்போது போராட்டக்காரர்களிடையே பாஜக எம்பி ஷோபாகரந்தலஜே பேசியது: மகதாயி ஆற்றுநீர் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. பாஜக மாநிலத்தலைவர்  எடியூரப்பாவின் முயற்சியால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதியுள்ளார். பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடவிரும்பாத முதல்வர் சித்தராமையா, கோவா காங்கிரஸ் கட்சியினரை தூண்டிவிட்டு மகதாயி பிரச்னைக்கு எதிராக பேசவைக்கிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதோடு, இப்பிரச்னையை அரசியலாக்கி வேடிக்கைபார்க்கிறது.
குடிநீர் விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. மகதாயி பிரச்னையை தீர்க்க பாஜக நேர்மையான முயற்சியை எடுத்துள்ளது. காங்கிரஸ் அலுவலகம் முன் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வந்த எங்களை போலீஸார் தடுத்து நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மகதாயி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு எதிராக கோவா காங்கிரஸ் தலைவர் சாந்தாராம்நாயக் பேட்டியளித்துள்ளார். அவரை கண்டிக்கும் திராணி இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கிறதா? இந்த விவகாரத்தில் கோவா மாநில காங்கிரஸாரை சமாதானப்படுத்தி குடிநீர் பெற்றுத் தராமல், இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்கி வருகிறது என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →