பெங்களூரு

சித்தராமையா மீதான ஊழல்களை விரைவில் வெளியிடுவேன்

தினமணி

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான ஊழல்களை விரைவில் வெளியிடுவதாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
 பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை மகரிஷி வால்மீகி பிறந்த நாள் விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
 முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இதை விரைவில் அம்பலப்படுத்துவேன். மாநிலத்தில் உள்ள ஊழல் ஒழிப்புப் படையினர், ஊழல் ஒழிக்கும் பணியில் ஈடுபடவில்லை. மாறாக, காங்கிரஸ் அரசை விமர்சிப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் சோதனை நடத்துகின்றனர்.
 ஊழல் ஒழிப்புப் படையினர் பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டால், அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவிப்பார்கள். ஆனால், அதைத் தவிர்த்து, வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது சோதனையில் ஈடுபட்ட வருமான வரித் துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்த ஊழல் ஒழிப்புப் படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஊழல் ஒழிப்புப் படையை தனது கைப்பாவையாக அரசு ஆட்டுவித்து வருவது சரியல்ல.
 மேலும், எனது தலைமையிலான பாஜக ஆட்சியில் வால்மீகி பிறந்த நாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வால்மீகி சமுதாய வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ. 2 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆனால், முதல்வர் சித்தராமையா, வால்மீகி சமுதாயத்திற்கு அனைத்தையும் செய்தது போல பிரசாரம் செய்து வருகிறார்.
 வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு, வால்மீகி சமுதாயத்தின் காவலர் போல சித்தராமையா நடித்து வருகிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வால்மீகி ஜயந்தியை பிரம்மாண்டமாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்தார். ஆனால், 3 மாதங்களாகியும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அதற்கான நிதியை வழங்காமல் அரசு காலம் கடத்தி வருகிறது.
 விவசாயிகளின் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசு அலட்சியம் காட்டினால், விரைவில் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT