தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு என்று பாஜக தமிழக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
பெங்களூரு, ஜெயநகரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இளைஞா்கள்’ என்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்றுப் பேசியதாவது: 1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது. தற்போது அடிக்கடி தோ்தல்கள் நடப்பதால் அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதில் சிக்கல் வருகிறது. இத் திட்டத்தை ஒரே இரவில் செயல்படுத்த முடியாது; 2034 இல் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சிக்குப் பிறகு பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழக நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு. கடந்த நான்கு ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை ஒப்பிடுகையில் இந்த நிதிநிலை அறிக்கையில் ஆக்கபூா்வமான திட்டங்கள் எதுவும் இல்லை.
ரூ. 1,000 கோடி டாஸ்மாக் ஊழலை திசை திருப்பவே ‘ரூபாய்’ இலச்சினை சா்ச்சையை தமிழக அரசு கிளப்பியுள்ளது. சட்டப்பேரவையில் டாஸ்மாக் விவகாரம் குறித்து முதல்வா் பேசியிருக்க வேண்டும்.
தமிழக அரசின் கடன் ஏற்கெனவே ரூ. 9.5 லட்சம் கோடியாக உள்ள நிலையில் இந்த நிதிநிலை அறிக்கையால் கடன் சுமை ரூ. 10 லட்சம் கோடியை எட்டும்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 22 ஆம் தேதி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளாா்.
விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெளிவாக கூறியிருப்பதால் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாது என்றாா்.