பெங்களூரு

எடியூரப்பாவின் முதல்வர் கனவு பலிக்குமா?

75 வயதை கடந்தவர்கள் கட்சி மற்றும் அரசு பதவிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற பாஜகவின் புதிய மரபின்படி கர்நாடகத்தில்

ந.முத்துமணி

75 வயதை கடந்தவர்கள் கட்சி மற்றும் அரசு பதவிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற பாஜகவின் புதிய மரபின்படி கர்நாடகத்தில் பாஜக வெற்றி பெற்றால் 75 வயதை கடந்த எடியூரப்பாவுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், கடைசி நேரத்தில் தனது மகன் விஜயேந்திராவுக்கு  வாய்ப்பு மறுக்கப்பட்டது, தன்னால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களை பாஜக மேலிடம் நிராகரித்தது ஆகிய நிகழ்வுகளின் பின்புலத்தில் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக  தலைவர்கள் சிலர் செயல்படுவது உறுதியாகியுள்ளது. 
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பாஜக வெற்றி பெற்றால் எடியூரப்பாதான் முதல்வர் என அறிவித்திருந்தாலும், தற்போது அரசியல் நிகழ்வுகள் எடியூரப்பாவின் முதல்வர் கனவை நிறைவேற்றுமா என்பது அனைவரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் வேட்பாளர்கள்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார், ஜி.பரமேஸ்வர் பெயர்களை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் பரிசீலிக்கலாம். மஜத வென்றால் அதன் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி முதல்வராவார்.
இதேபோல, பாஜக வென்றால் எடியூரப்பாதான் முதல்வர் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்திருக்கிறார். மேலும், முதல்வர் பதவியேற்ற பிறகு அந்த பதவியில் எடியூரப்பா ஐந்தாண்டுகள் நீடிப்பார் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஆனாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்றால் எடியூரப்பா முதல்வர் ஆக்கப்படுவாரா? என்ற கேள்வி கடந்த 6 மாதங்களாகவே கர்நாடக மக்கள் மத்தியில் விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வருணா தொகுதியில் எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பிறகு, இந்த கேள்வி வலுத்துள்ளது.
கர்நாடக பாஜகவின் முகமாக அறியப்பட்டுள்ள எடியூரப்பாவின் தலைமையை விரும்பிய அவர் சார்ந்திருக்கும் லிங்காயத்து சமுதாயத்தினர், தொடர்ந்து அவரை ஆதரித்து வந்துள்ளனர். எனவே, எடியூரப்பா மற்றும் லிங்காயத்துகளின் துணையில்லாமல் பாஜகவின் தேர்தல் வெற்றி சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
விலகல்
முந்தைய பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த எடியூரப்பா, உள்கட்சிபூசல் மற்றும் சுரங்க முறைகேடு காரணமாக அப்பதவியில் இருந்து விலக நேர்ந்தது. இதைத் தொடர்ந்து கட்சியில் ஓரங்கட்டப்பட்ட எடியூரப்பா, பாஜகவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சியைத் தொடங்கி, 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். இத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.
இதனிடையே, எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி கண்டு தேர்தலை சந்தித்ததால், கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை பாஜக உணர்ந்து கொண்டது. அதன்பிறகு, 2018-ஆம் ஆண்டுக்கான தேர்தல் வியூகங்கள் குறித்து அமித்ஷா ஆலோசித்தார்.
2013-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா கட்சி, 9.79 சதவீத வாக்குகளை பெற்று 6 இடங்களை வென்றது. ஸ்ரீராமுலு தலைமையிலான பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 2.69 சதவீத வாக்குகளை பெற்று, 4 இடங்களைக் கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 19.89 சதவீத வாக்குகளும் 40 இடங்களும் கிடைத்தன. 
சட்டப்பேரவைத் தோல்விக்குப் பிறகு 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது எடியூரப்பா, அவரைத் தொடர்ந்து ஸ்ரீராமுலு பாஜகவில் இணைந்தனர். இவர்களின் வருகைக்குப் பிறகு கணக்கிட்டதில், 2013-இல் பெற்ற வாக்குகளின்படி பாஜகவுக்கு தற்போது 32.37 சதவீத வாக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. 
2008-இல் பாஜக 110 இடங்களில் வென்றபோது, பாஜகவுக்கு 33.86 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதன்படி எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோருடன் பிரதமர் மோடியின் செல்வாக்கையும் சேர்த்தால் இத் தேர்தலில் பாஜகவுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கும், அதன்மூலம் 125 இடங்களை வென்று ஆட்சி அமைக்கலாம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கணக்கு போட்டுள்ளார்.
இதன்காரணமாகவே, ஊழல், சுரங்கமுறைகேடு குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டிருந்த எடியூரப்பாவை பாஜகவில் சேர்த்துக்கொண்டதோடு, உள்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாஜக மாநிலத் தலைவராகவும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் எடியூரப்பாவை அமித்ஷா அறிவித்தார். 
எடியூரப்பாவின் செல்வாக்கை விரும்பாத அவரது கட்சியின் மூத்தத் தலைவர்கள், அவருக்கு எதிராக காய்நகர்த்த தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் முதல்படியே எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் வாய்ப்பு கிடைக்குமா?
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தாலும் எடியூரப்பா முதல்வராவது சுலபமானதல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதற்கு எடியூரப்பாவின் வயதை காரணமாக சொல்கிறார்கள். 
75 வயதை கடந்தவர்கள் கட்சி மற்றும் அரசு பதவிகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டுமென்பதே பாஜகவின் புதிய மரபாக உள்ளது. அதன்படி, 2018 பிப்.27-ஆம் தேதி 75 வயதை கடந்த எடியூரப்பாவை கட்சி பின்பற்றும் மரபுக்கு எதிராக எப்படி முதல்வராக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. 
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014-இல் பிரதமரான பிறகு ஆனந்திபென்படேல் முதல்வராக்கப்பட்டார். அப்போது அவருக்கு 73 வயது. 2016-இல் ஆனந்திபென்படேலுக்கு 75 வயதானபோது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மத்திய பிரதேச ஆளுநராக்கப்பட்டார். 75 வயதை கடந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்ற பலர் கட்சி பதவிகளில் இருந்துவிடுவிக்கப்பட்டு, வழிகாட்டுதல் குழுவாக மாற்றப்பட்டுவிட்டனர்.  அந்த வழியில் எடியூரப்பாவுக்கும் வழிகாட்டுதல் குழுவில் இடம்கிடைக்குமே தவிர, முதல்வராக முடியாது ன்கிறார்கள். 
முக்கியத்துவம் குறைகிறது
2008-இல் எடியூரப்பா முதல்வரானபோது கட்சியிலும், ஆட்சியிலும் அவர் சொன்னதே நடந்தது. இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவை முன்னிலைப்படுத்தினாலும், அவர் கைகாட்டியவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் கூட கட்சி இடம் அளிக்கவில்லை. 
வருணா தொகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்று திகழும் தனது மகன் விஜயேந்திராவை வேட்பாளராக்க 
முடியாத நிலையில் எடியூரப்பா உள்ளார். சுரங்கத் தொழிலதிபர்களான ஜனார்த்தனரெட்டி, அவரது சகோதரர்கள் சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி, நண்பர் பி.ஸ்ரீராமுலுவின் ஆதிக்கம் பாஜகவில் மீண்டும் தொடங்கியுள்ளது எடியூரப்பாவின் தலைமைக்கு ஆபத்தாக பார்க்கப்படுகிறது. 
முந்தைய பாஜக ஆட்சியில் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க போர்க்கொடி தூக்கியவர்களே ரெட்டி சகோதரர்கள்தான் என்று காரணம் கூறுகிறார்கள். சுரங்க முறைகேடு தொடர்பான ஒருசில வழக்குகளை இன்னும் எதிர்கொண்டுள்ளதும் எடியூரப்பாவுக்கு எதிரான அம்சமாக பார்க்கப்படுகிறது. 
மாற்று அரசியல்
தேர்தல் கருத்துக் கணிப்புகளில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வரும் என்று தெரியவந்துள்ளன. அந்த சூழலில் ஆட்சிக்கு வரவிடாமல் காங்கிரஸ் கட்சியைத் தடுக்கும் வகையில் மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. 
மஜதவுக்கு 35-50 இடங்களும், பாஜகவுக்கு 80-90 இடங்கள் கிடைத்தாலும் எச்.டி.குமாரசாமியை முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
2019-இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து 28-இல் 25 இடங்களைக் கைப்பற்ற லிங்காயத்து-ஒக்கலிகர்-தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் சமுதாயங்களின் ஆதரவை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ள பாஜக, அதற்கு ஒக்கலிகர் ஆதரவை பெற்றுள்ள மஜதவும் லிங்காயத்துகளின் ஆதரவை பெற்று பாஜகவும் கூட்டணி அமைப்பது அத்தியாவசியமானது என்று அமித்ஷா கருதுகிறார். 
மஜத தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முதல்வர் பதவியை குமாரசாமிக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தால், அதை ஏற்க பாஜக தயாராக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் சூழ்நிலை, வயதை காரணம் காட்டி எடியூரப்பாவின் முதல்வர் கனவு முடக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 
தனிமதவிவகாரத்தில் லிங்காயத்துகள் இம்முறை காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தால், இயல்பாகவே பாஜகவின் வெற்றி வாய்ப்பு தவறி, அதன்காரணமாக எடியூரப்பாவின் முதல்வர் கனவு நனவாகாமல் போகலாம். உள்கட்சி எதிர்ப்பு, அரசியல் சூழ்நிலை, 75 வயது, ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கம் போன்ற காரணங்களால் தனது அரசியல் வாழ்க்கையின் கடைசி தேர்தலை சந்திக்கும் எடியூரப்பாவின் முதல்வர் கனவு கேள்விக்குறியாகலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். 
இந்த சூழலில் தனது அரசியல் வாழ்க்கையை இனிமையாக நிறைவு செய்ய எடியூரப்பாவை ஆளுநராக்கி பாஜக கெளரவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எடியூரப்பா முதல்வர் ஆவாரா? ஆளுநர் ஆவாரா? என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

SCROLL FOR NEXT