பாஜகவைவிட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி
எந்தசூழ்நிலையிலும் பாஜகவைவிட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தெரிவித்தார்.
எந்தசூழ்நிலையிலும் பாஜகவைவிட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து சித்ரதுர்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சித்ரதுர்கா மாவட்டத்தின் மொலகல்மூரு தொகுதியில் பாஜக வேட்பாளராக எனது நண்பர் ஸ்ரீராமுலு போட்டியிடுகிறார். இதன்மூலம் பி.எஸ்.எடியூரப்பாவை முதல்வராக்குவேன். பாஜகவில் இருந்து விலகாத நிலையில், பாஜகவை துறக்கும் அல்லது மீண்டும் சேரும் பேச்சுக்கே இடமில்லை. பாஜகவில் இருந்துநான் விலகமாட்டேன். ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கக் கூடாது என்று யாரும் என்னை தடுக்க முடியாது.
இந்தத் தேர்தலில் சித்தராமையாவை தோற்கடிப்பதே எனது இலட்சியமாகும். எடியூரப்பாவை முதல்வராக்க வேண்டு என்பதால், எனது சொந்த விருப்பத்தின்பேரில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.
முதல்வர் சித்தராமையா, என்னை குறிவைத்து விமர்சித்து வந்தாலும் என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கமுடியாமல் இருக்கிறார். எனக்கு எதிரான 90 சதவீத வழக்குகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள வழக்குகளில் இருந்தும் நான் விடுவிக்கப்படுவேன். சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படமலே உள்ளன.
என் மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. சிறையில் இருந்தது என் வாழ்க்கையின் கெட்ட கனவாக நினைக்கிறேன். அதை திரும்ப நினைத்து பார்க்கவிரும்பவில்லை. எதிர்கால அரசியல் திட்டங்கள் எதுவுமில்லை. சமூக சேவையில் ஆர்வம் காட்டுவேன் என்றார்.