பெங்களூரு

முதல்வர் குமாரசாமியை கலங்கடிக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி அரசியல்!

கர்நாடகத்தை ஆட்டிப்படைத்து வரும் பயிர்க்கடன் தள்ளுபடி அரசியல், முதல்வர் குமாரசாமியை வெகுவாக கலங்கடித்திருக்கிறது.

ந.முத்துமணி

கர்நாடகத்தை ஆட்டிப்படைத்து வரும் பயிர்க்கடன் தள்ளுபடி அரசியல், முதல்வர் குமாரசாமியை வெகுவாக கலங்கடித்திருக்கிறது.
விவசாயிகளின் சங்கங்களும், போராட்டங்களும் கர்நாடகத்தில் வலிமையாகவே இருந்து வந்துள்ளன. எந்த கட்சியின் அரசு வந்தாலும், விவசாயிகளை அலட்சியப்படுத்திவிட்டு அரசியல் நடத்த முடியாத நிலை இங்குள்ளது.
இந் நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடகத்தில் போதுமான மழை பெய்யாததால், வறட்சி வாட்டி எடுத்தது. இதன் காரணமாக, 3,800-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் தற்கொலையை முன்வைத்து அரசியல் நடத்த தொடங்கிய பாஜகவும், மஜதவும், விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும்படி அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
கடந்த 2017 மார்ச் 31-ஆம் தேதி வரை கர்நாடகத்தில் 51 லட்சம் விவசாயிகள் ரூ.52,744.28 கோடி பயிர்க்கடன் பெற்றுள்ளனர். இதில், 28.73 லட்சம் விவசாயிகள் ரூ.42,007.47 கோடி தேசிய வங்கிகளிலும், 22.27 லட்சம் விவசாயிகள் ரூ.10,737.81கோடி கூட்டுறவு வங்கிகளிலும் பயிர்க்கடன் பெற்றுள்ளதாக தெரிவித்திருந்த அப்போதைய முதல்வர் சித்தராமையா, பயிர்க்கடனைத் தள்ளுபடிசெய்ய நிதியுதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு பிரதமர் மோடியிடம் இருந்து எவ்விதப் பதிலும் வராத நிலையில், 2017-18-ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அப்போதைய முதல்வர் சித்தராமையா, கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதிவரை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதில் 22,27,506 விவசாயிகள் பயனடைந்தனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத பாஜகவும், மஜதவும் விவசாயிகளின் முழுமையான பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு அழுத்தம் கொடுத்தன. இதற்காக போராட்டங்களும் நடத்தப்பட்டன. மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாஜக தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யுமாறு அபோதைய காங்கிரஸ் அரசும், முதல்வர் சித்தராமையாவும் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே, ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க்கடனில் ரூ.1 லட்சம் வரையிலான கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்தது. இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக மஜத அறிவித்தது. இதையே முன்னிலைப்படுத்தி, அக் கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமியும் தீவிர பிரசாரம் செய்தார்.
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை. தனிப்பெரும் கட்சியாக வென்ற பாஜக, சட்டப்பேரவையில் போதுமான பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி அமைத்தபோது, அதன் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா அரசு, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஆனால் 3 நாள்களில் பதவியை பறிகொடுத்த எடியூரப்பா, முதல்வராக குமாரசாமி பதவியேற்றதும் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்.
மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை நெருக்கடியில் சிக்கவைத்து, அதன்மூலம் கூட்டணியை உடைப்பதை நோக்கமாக கொண்டிருந்த எடியூரப்பாவின் அரசியல் சதியைப் புரிந்துகொண்ட காங்கிரஸ், ஆரம்பத்தில் ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி ஒப்புதல் அளிக்காவிட்டாலும், பின்னர், பயிர்க்கடன் தள்ளுபடிக்கு கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்தது. பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் கூட்டணியை முறித்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி தலையிட்டு, பயிர்க்கடன் தள்ளுபடியை மேற்கொள்ள முதல்வர் குமாரசாமிக்கு ஊக்கமளித்தார். இந்த உற்சாகத்தில் களமிறங்கிய முதல்வர் குமாரசாமி, தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.2 லட்சம் வரையிலான நிலுவை பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மேலும், கூட்டுறவு வங்கிகளில் நடப்பு பயிர்க்கடனில் ரூ.25 ஆயிரம் வரையிலான கடன் தொகையை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, முதல்வர் குமாரசாமி விவசாயிகளை நம்பவைத்து மோசம் செய்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தது.
பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் மட்டுமல்ல, தன் சொந்த கட்சியான மஜதவிலும் அதிருப்தி வெளிப்பட்டதை முதல்வர் குமாரசாமியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்த போதே வீதியில் இறங்கிய விவசாய சங்கத்தினர், பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடிசெய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் முதல்வர் குமாரசாமி தங்களை அவமதிப்பாகவும் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.
ரூ.34 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தும், கூட்டணி கட்சியான காங்கிரஸ், சொந்த கட்சியான மஜத, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் விவசாயிகளிடையே அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதது முதல்வர் குமாரசாமியை கலங்கடித்திருக்கிறது.
இதைச் சமாளிக்க முயன்ற முதல்வர் குமாரசாமி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் நடப்பு பயிர்க்கடனில் ரூ.1 லட்சம் வரையிலான கடன் தொகையை அதாவது ரூ.10,700 கோடியை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்பிறகும், விவசாயிகள், அரசியல் கட்சிகளிடையே மகிழ்ச்சி வெளிப்படவில்லை.
இந்நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற மஜதவின் வாக்குச்சாவடி செயல்வீரர் பிரிவு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் குமாரசாமி, தான் செய்துள்ள நலப் பணியை பாராட்ட யாருக்கும் மனம் வரவில்லையே என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார். தனது முயற்சிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், தாங்கமுடியாத கோபத்தில் இருக்கும் முதல்வர் குமாரசாமி,கடவுள் விரும்பும் வரை முதல்வர் பதவியில் நீடிப்பேன்' என்று கூறியிருக்கிறார். விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும்வரை போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளதும் முதல்வர் குமாரசாமியின் கவலையை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

SCROLL FOR NEXT