பெங்களூரு

கர்நாடக அரசியலில் தேய்கிறதா திராவிடம்...?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டுவரும் திராவிட இயக்கங்களான திமுகவும், அதிமுகவும் காலப்போக்கில் அரசியல் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன.

ந.முத்துமணி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டுவரும் திராவிட இயக்கங்களான திமுகவும், அதிமுகவும் காலப்போக்கில் அரசியல் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்கம்,  சமூகப் புரட்சிக்கு வித்திட்டது.  நீதிக் கட்சி,  திராவிடர் கழகம்,  திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று திராவிட இயக்கங்கள் பரிணமித்தபோது,   அதன் கிளைகள் தென்னிந்தியாவில் மட்டுமல்லாது, வட இந்தியாவின் மகாராஷ்டிரத்திலும் பரவத் தொடங்கின. 
தென்னிந்தியாவில் கேரளம்,  ஆந்திரம்,  புதுச்சேரி,  கர்நாடகத்தில் திராவிட இயக்கங்கள் தங்கள் கிளைகளைப் பரப்பியது காலச்சுவடுகளில் பதிவாகியுள்ளது.  அதிலும், குறிப்பாக கர்நாடகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் வீச்சோடு காணப்பட்டதை வரலாறு பதிவு செய்து கொண்டுள்ளது.  கர்நாடகத்தில் தோன்றிய திராவிட இயக்கங்கள் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருந்துவருகின்றன. 
திராவிடர் கழகம், தேர்தல் அரசியலில் ஈடுபடாத காரணத்தால் சமூகப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளது.  ஆனால்,  திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (அதிமுக), கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமல்லாது,  பெங்களூரு மாநகராட்சித் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று, இங்குள்ள அரசியல் நடப்பில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளன. 
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும்,  அதிமுகவும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்துள்ளன.  திமுகவைச் சேர்ந்த டி.பூசலிங்கம் (எ)திராவிடமணி),  அதிமுகவைச் சேர்ந்த மு.பக்தவத்சலம்,  பி.முனியப்பா ஆகியோர் சட்டப்பேரவையில் பங்காற்றியுள்ளனர்.  ஆனால்,  காலப்போக்கில் திமுகவும், அதிமுகவும் தங்களது அரசியல் முக்கியத்துவத்தை இழந்துகொண்டே வருகின்றன. 
மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மட்டும் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  
திமுக...பெங்களூரின் தண்டுபகுதி,  கோலார் தங்கவயல் நகரங்களில் 1946-ஆம் ஆண்டு பெ.ம.அப்பாதுரை,  பூ.அ.கொடையரசன், நாராயணசாமி, பூ.பார்த்தசாரதி, பெரியப்பா, விஜயலட்சுமி ஆகியோரின் முயற்சியில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு, செயல்பட தொடங்கியது. 
இந்த இயக்கத்தில் இப் பகுதியில் பெருவாரியாக வாழ்ந்த தமிழர்கள் மட்டுமல்லாது,  கன்னடர்கள்,  தெலுங்கர்களும் இணைந்து பணியாற்றினர். தந்தை பெரியாரின் திராவிடர்கழகத்தில் இருந்து பிரிந்த பேரறிஞர் அண்ணா, 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) தோற்றுவித்தார்.  இதைத் தொடர்ந்து,  பெங்களூரு, கோலார்தங்கவயலில் இயங்கி வந்த திராவிடர் கழகக் கிளைகள்,  திமுக கிளைகளாக மாறின. 
தேர்தல் அரசியலில் ஈடுபட திமுக முடிவெடுத்த பிறகு,  அப்போதைய மைசூரு மாநிலத்துக்கு 1957-இல் நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முதல்முறையாக களமிறங்கியது.  அந்தத் தேர்தலில் கோலார் தங்கவயல், பெங்களூரின் பிராட்வே ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது. 
இந்தத் தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் சாம்பசிவமும்(2,646 வாக்குகள்),  பிராட்வே தொகுதியில் எம்.நாகராஜும்(1,675 வாக்குகள்)  போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தனர்.  அதன்பிறகு, 1962-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூரின் மல்லேஸ்வரம் தொகுதியில் அன்னியப்பன்(2,648 வாக்குகள்),  கோலார் தங்கவயலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்(1,100),  காந்திநகரில் நடேசன்(2,774), பிராட்வேயில் எஸ்.வி.பதி(2,265)ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். 
இதைத் தொடர்ந்து,  1967-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிநகர்,  காந்திநகர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முறையே டி.பூசலிங்கம், எஸ்.வி.பதி போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் 2 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பை திமுக இழந்தது. 
1972-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிநகர், சாந்திநகர், காந்திநகர், சிவாஜிநகர் ஆகிய 4 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. சாந்திநகரில் வி.சிவசங்கர்(10,342 வாக்குகள்),  காந்திநகரில் எஸ்.இ.வேணுகோபால்(11,535), சிவாஜிநகரில் எஸ்.ஜே.உசேன்(3100)போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.  
ஆனால், பாரதிநகரில் போட்டியிட்ட டி.பூசலிங்கம், 15,810 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.  இந்தத் தேர்தலில் தான் திமுக முதலும் கடைசியுமாக சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தது. 
1978-இல் நடைபெற்ற தேர்தலில் சாந்திநகர், சிவாஜிநகர், பாரதிநகர், காந்திநகர் ஆகிய 4 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது.  1985-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, 1989, 1994, 1999, 2004, 2008, 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைகளில் திமுக போட்டியிடவில்லை. 
அதிமுக... திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர், 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை(அதிமுக)தொடங்கினார்.  அதே ஆண்டில் கர்நாடகத்திலும் அதிமுக தொடங்கப்பட்டது.  பெங்களூரு, கோலார் தங்கவயல் மட்டுமல்லாது,  சிவமொக்கா,  பத்ராவதி, சிக்மகளூரு,  ஹனூர் போன்ற நகரங்களிலும் அதிமுக வளர்ச்சி அடைந்தது.  கட்சி தொடங்கப்பட்டபிறகு, கர்நாடக சட்டப்பேரவைக்கு 1978-இல் தேர்தல் நடந்தபோது,  சாமராஜ்பேட், சாந்திநகர், சிவாஜிநகர், பாரதிநகர், ஜெயமகால், சிக்மகளூரு, பத்ராவதி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. 
இதைத் தொடர்ந்து,  1983-இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் மட்டும் மு.பக்தவத்சலத்தை வேட்பாளராக நிறுத்தியது.  இந்த தேர்தலில், பக்தவத்சலத்தை ஆதரித்து எம்ஜிஆர் கோலார்தங்கவயலில் பிரசாரம் செய்தார்.  இதன்விளைவாக,  போட்டியிட்ட முதல்முறையிலேயே 16,234 வாக்குகள் பெற்று பக்தவத்சலம் வெற்றிபெற்றார். 
 1985-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் தங்கவயலில் மு.பக்தவத்சலம்(12,545 வாக்குகள்), காந்திநகரில் பி.முனியப்பா(9,457) ஆகியோர் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.
1989-இல் கோலார் தங்கவயலில் போட்டியிட்ட மு.பக்தவத்சலம், 32,928 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று,  2-ஆவது முறையாக அதிமுக பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் சென்றார்.
இந்த காலகட்டத்தில் சட்டப்பேரவையில் தமிழில் பேச முற்பட்ட மு.பக்தவத்சலம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.  1994-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் தங்கவயலில் பக்தவத்சலம்(17,862 வாக்குகள்), காந்திநகரில் பி.முனியப்பா(16,862), சிக்பேட்டில் கே.ஆர்.கிருஷ்ணராஜ்(8,131),  பாரதிநகரில் வா.புகழேந்தி(7,810)  போட்டியிருந்தனர்.   இவர்களில் பி.முனியப்பா வெற்றிபெற்று, சட்டப்பேரவைக்குச் சென்றார்.
இதைதொடர்ந்து, 1999-இல் நடந்த சட்டப்பேரவையில் கோலார் தங்கவயலில் மு.பக்தவத்சலம் மட்டும் வெற்றிபெற்றிருந்தார்.  அதிமுகவில் இருந்து 3முறை எம்எல்ஏவாக வென்றிருந்த மு.பக்தவத்சலம், கட்சியில் இருந்து விலகி மஜதவில் இணைந்துவிட்டார்.  
2008-இல் 7 வேட்பாளர்கள் மொத்தம் 9,088 வாக்குகளையும், 2013-இல் 5 வேட்பாளர்கள் மொத்தம் 10,280 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 
 1999-ஆம் ஆண்டுக்கு பிறகு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, சம்பிரதாயமாக வேட்பாளர்களை அறிவித்துவருகிறது.  தேர்தலை தீவிரமாக கருதாத நிலையில்,  மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காந்திநகரில் எம்.பி.யுவராஜ்,  ஹனூரில் ஆர்.பி.விஷ்ணுகுமார், கோலார் தங்கவயலில் மு.அன்பு ஆகியோரை அதிமுக களமிறக்கியுள்ளது.  இதே நிலை நீடித்தால், அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக போட்டியிடுவது கேள்விக்குறியாகுமென்று அக் கட்சியினர் வேதனையோடு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

SCROLL FOR NEXT