பெங்களூரு

சந்திரயான்-1 விண்கலம் விண்ணுக்குச் செலுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தின் உச்சமாகக் கருதப்படும் சந்திரயான்-1 விண்கலம் விண்ணுக்கு

ந.முத்துமணி

இந்தியாவின் விண்வெளிப் பயணத்தின் உச்சமாகக் கருதப்படும் சந்திரயான்-1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டு,  திங்கள்கிழமையுடன் (அக்டோபர் 22) 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
விண்வெளி ஆராய்ச்சியில் உலகமே இந்தியாவைத் திரும்பி பார்க்கவைத்த தருணமானது 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதியாகும். அன்றுதான் சந்திரயான்-1 எனும் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
தொலைதூரத்தில் இருக்கும் நிலவை விண்கலத்தின் வாயிலாக அங்குலம் அங்குலமாக ஆய்வுக்குள்படுத்தும் அறிவியல் திறனை இந்தியா பெற்றிருந்ததை உலகம் உணர்ந்த நாளாகும்.  நிலவில் கொடிநாட்டி இருந்தாலும்,  அமெரிக்கா,  ரஷியா போன்ற நாடுகளால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததை இந்தியா கண்டுபிடித்து அறிவியல் உலகில் கொடிநாட்டியது சந்திரயான்-1 விண்கலம் என்பது சரித்திரத்தில் இடம்பெற்ற சாதனையாகும். 
நிலவில் தண்ணீரை ஆதாரத்துடன் நிரூபித்தது நிலவில் மனிதன் வாழ்வதற்குத் தேவைப்படும் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 விண்கலம்தான் அறிவியல் ஆதாரங்களோடு உலகுக்கு முதலில் எடுத்துக் காட்டியது. 
இந்திய விண்வெளி ஆய்வுப் பணியின் உச்சமாகக் கருதப்படும் சந்திரயான்-1 எனும் விண்கலத்தை வடிவமைத்து,  விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியதால், 3 பன்னாட்டு விருதுகளைப் பெற்ற திட்டத்தின் இயக்குநராகப் பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரை நிலவு மனிதன் என்றழைக்கப்படுகிறார்.
விண்கலத்தின் இயக்கம் எப்படி?
இந்த நிலையில், விண்கலம் ஏவி 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில்,  மயில்சாமி அண்ணாதுரையிடம் கேட்டபோது, அவர் கூறியது:-
2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி  காலை 6.22 மணிக்கு சந்திரயான் -1 விண்ணில் பாய வழிவிடும் வண்ணம்  இடி மின்னலுடன் இரவெல்லாம் பெய்த மழை நின்றது.
பிஎஸ்எல்வி ராக்கெட்,  சந்திரயான்-1 விண்கலத்தைச் சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது.  அடுத்து வரும் இந்திய விண்வெளிச் சாதனைகளுக்கு வித்திட்ட தருணம்.
அதே ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி சந்திரயான்-1 நிலவைச் சுற்றிய துருவ வட்டப்பாதையில் நுழைந்தது.   நவம்பர் 14-இல் மாலை 6 மணிக்கு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முன்னிலையில்,  சந்திரயான்-1 தாய்க்கலனில் பொருத்தப்பட்டிருந்த 'இம்பேக்ட் ப்ஃரோப்' என்ற சிறிய கலன் அதில் இருந்து பிரிந்து சந்திரனில் மோதும் வண்ணம் கட்டளை பிறப்பித்தோம். 
நிலவை நோக்கி அது பறந்து சென்ற 27-வது நிமிடத்தில் தரையில் 'இம்பேக்ட் ப்ஃரோப்' சிறிய கலன் மோதியது.  அப்படி மோதும் முன், தான் சுமந்து சென்ற அறிவியல் ஆய்வுக் கருவிகளில் ஒன்று நிலவின் மிக மிக அரிதான வளி மண்டலத்தில் சில தனிமங்களின் மூலக்கூறுகளைக்  கண்டறிந்தது.  அதில் மிக முக்கியமானது "நீர்". 
அந்த சமயம் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.  
சந்திரனின் வளி மண்டலத்தில் நீரின் மூலக்கூறுகள் இருந்தால் அதற்கான காரணம் நிலவின் தரையில் இருக்கும் நீர், சூரிய ஒளியால் நீர் ஆவியாகி வந்திருக்க வேண்டும் என்று அனுமானித்தோம்.  அதன்படி,  சந்திரயான்-1 சுமந்து சென்ற மற்ற அறிவியல் சாதனங்களின் உதவியுடன், சந்திரனின் முழுப் பரப்பையும் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறை அறிய முற்பட்டோம். அதன்படி, நிலவின் தரையில் பல இடங்களில் நீரின் மூலக்கூறுகளும், துருவப் பகுதிகளில் உள்ள பெரிய இருண்ட பள்ளத்தாக்குகளில் உறைபனிக் கட்டிகளாக இருப்பதையும் கண்டோம். 
சர்வதேச அறிவியல் அரங்குகளில் அது ஆமோதிக்கப்பட்டு, சந்திரயான்-1 விண்கலனுக்கு அதற்கான உரிமம் அளிக்கப்பட்டபோது உலக அரங்கில் விண்வெளி ஆய்வில் நிலவில் நீர்கண்ட முதல் நிலவுக் கலனாய் சந்திரயான்-1 வரலாறு படைத்தது. 
அமெரிக்கா உட்பட  பல சர்வதேச  அறிவியலாளர்கள் சந்திரயானின் அறிவியல் சமிக்ஞைகளை திரும்பவும் ஆய்வுக்குள்ளாக்கி கடந்த மாதம் உலகுக்கு அறிவித்தது," சந்திரயான்-1 மூலம் நிலவில் நீர் கண்டுபிடித்தது சரியே" என்பதாகும்.    
நிலவில் நீர் கண்டுபிடித்தது; சந்திரயானின் கட்டுமானச் சிறப்பு; அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான், பல்கேரியா  எனப் பல சர்வதேச நாடுகளை உள்ளடக்கி தலைமைப் பொறுப்பேற்று திட்டத்தை எடுத்து நடத்திய சர்வதேச ஆதரவுக்கு என மூன்று சர்வதேச விண்வெளி ஆய்வு விருதுகளை முதல் முறையாக பெற்ற செயற்கைக்கோளானது சந்திரயான்-1. 


உலக அரங்கில் இந்தியாவுக்கு அங்கீகாரம்
சந்திரயானின் சாதனைகள் உலக அறிவியல் அரங்கில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.  கூடுதலான நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் சர்வதேச நாடுகள் இந்தியாவுடன் விண்வெளி ஆய்வில் இணைந்து பணிபுரிய முன்வந்துள்ளன. 
      இந்திய விண்வெளி வீரர்களை இந்தியாவிலிருந்து அனுப்பும்  முயற்சிக்கு அமெரிக்கா,  ரஷியா, பிரான்ஸ் என  இன்று நாம் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு சந்திரயானில்  அவர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து கண்ட வெற்றியே காரணமானது.
 சந்திரயான் திட்டத்தின் அனுபவங்களும் இந்த வெற்றிகளும் இந்தியா செவ்வாய் கிரகத்துக்கான ஆய்வுக்கு "மங்கள்யான்" விண்கலனையும்,  திரும்ப நிலவுக்காக சந்திரயான்-2 விண்கலனையும், சூரியனின் ஆய்வுக்காக ஆதித்யாவையும் எடுத்துச் செய்யும் துணிவை இந்தியாவுக்கு கொடுத்தது. 
இதன் முதல்படியில் மங்கள்யான் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு கோள் அனுப்பி முதல் முயற்சியிலேயே வென்ற முதல் நாடென்ற சரித்திரப் பெருமை பெற்றது இந்தியா.

விண்வெளி ஆய்வுப் பணியில் இந்தியாவுக்கு மைல் கல்
ஐம்பது வருட இந்திய விண்வெளி ஆய்வுப் பணியில் கடந்த பத்து வருடங்கள், பொன்னான வருங்கள் எனலாம்.  அதற்கான அடிக்கல் சந்திரயான்-1 என்றால் மிகையாகாது. சந்திரயான்-1  திட்டத்தின்  திட்ட இயக்குநராக இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய அறிவியலாளர் குழுவுடன் பணியாற்றியது எனக்கு(மயில்சாமி அண்ணாதுரை) பின்னாளில் பலப்பல திட்டங்களை ஒரே நேரத்தில் எடுத்துச் செய்யும் துணிவைக் கொடுத்தது. 
இதன் பலனே மாதம் ஒரு செயற்கைக்கோள் என்ற திட்டத்தை எடுத்து ,  36 மாதங்களில் 30 செயற்கைக்கோள்களைச் செய்து முடிக்க முடிந்தது.  விண்வெளி ஆய்வில் சந்திரயான்-1-இல் தொடங்கிய இந்தியாவின் வெற்றிச் சாதனைகள் மென்மேலும் வளரும், தொடரும்.  இந்திய விண்வெளி ஆய்வில் மைல்கல்லாக விளங்கும் சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது உள்ளபடியே பெரும் சாதனையாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT