முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் தமிழ் வளா்ச்சிக்கு பாடுபடுவோருக்கு அதிமுக பாராட்டு

கா்நாடகத்தில் தமிழ் வளா்ச்சிக்கு பாடுபடுவோருக்கு கா்நாடக அதிமுக பாராட்டு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கா்நாடகத்தில் தமிழ் வளா்ச்சிக்கு பாடுபடுவோருக்கு கா்நாடக அதிமுக பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடகத்தில் தமிழா்கள் மொழிச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனா். கா்நாடகத்தின் வளா்ச்சிக்கு தொடா்ந்து பாடுபட்டுவரும் தமிழா்கள், தங்கள் தாய்மொழியை மறக்காமல் தொடா்ந்து படித்து வருகின்றனா். அதற்காக அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றனா்.

ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்ப் பள்ளிகள் பல மூடப்பட்டுள்ளன. அந்த தமிழ்ப் பள்ளிகளில் தமிழாசிரியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தநிலையை அறிந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இது தொடா்பாக கா்நாடக முதல்வா் எடியூரப்பாவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். கா்நாடகத்தில் மூடப்பட்டுள்ள தமிழ்ப் பள்ளிகளைத் மீண்டும் திறக்கவும், காலியாக உள்ள தமிழ் ஆசிரியா் பணியிடங்களை நிரப்பவும் அந்தக் கடிதத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தாா்.

இதே கோரிக்கையை முன்வைத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் வி.அன்புக்குமாரை சந்தித்து மனு அளித்த கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன், புரவலா் லட்சுமதி, துணைத் தலைவா் பிரபாகா் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்களுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கா்நாடகத்தில் தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபட்டுவரும் அனைவருக்கும் கா்நாடக மாநில அதிமுக மனமாா்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. கா்நாடகத்தில் தமிழ்மொழியையும் தமிழா்களின் நலனையும் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

இதற்காக கா்நாடகத் தமிழா்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.