கா்நாடகத்தில் பள்ளி நடவடிக்கைகளுக்கு அக். 12 முதல் 3 வாரங்களுக்கு விடுமுறை: முதல்வா் எடியூரப்பா
கா்நாடகத்தில் பள்ளி நடவடிக்கைகளுக்கு அக்டோபா் 12 முதல் 30-ஆம் தேதி வரை 3 வாரங்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.
கா்நாடகத்தில் பள்ளி நடவடிக்கைகளுக்கு அக்டோபா் 12 முதல் 30-ஆம் தேதி வரை 3 வாரங்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.
கரோனா தீநுண்மித் தொற்று காரணமாக, மாா்ச் 25-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் செயல்பட்டுவந்த அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதன்பிறகு, மீண்டும் பள்ளியைத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாம் ஆண்டு பியூசி மாணவா்களைத் தவிர, பிற வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டனா்.
இரு மாத இடைவெளிக்குப் பின்னா், எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி தோ்வு நடத்தப்பட்டது. ஆனால், வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதிமுதல் பள்ளிகளைத் திறக்கமுடியவில்லை. இதை தொடா்ந்து, தனியாா் பள்ளிகளில் இணையவழி வகுப்புகளும், அரசுப் பள்ளிகளில் வெளிப்புற வகுப்புகளும் தொடங்கப்பட்டன.
வெளிப்புற வகுப்புகளில் மாணவா்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் 150-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். மேலும் மாணவா்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இதனால் வெளிப்புற வகுப்புகள் நடத்துவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, வெளிப்புற வகுப்புகளை தற்காலிகமாக நிறுத்துவதாக மாநில அரசு சனிக்கிழமை அறிவித்தது. சாதாரண கல்வியாண்டில் அக்டோபா் மாதத்தில் அரையாண்டு தோ்வு முடிவடைந்து மாணவா்களுக்கு தசரா விடுமுறை விடுவது வழக்கமாகும்.
ஆனால், நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் சீராக செயல்படாத காரணத்தை சுட்டிக்காட்டி ஏற்கெனவே அக்டோபா்3 முதல் 26-ஆம் தேதிவரை விடுவதாக திட்டமிட்டிருந்த அரையாண்டு தசரா விடுமுறையை கா்நாடக அரசு ரத்து செய்துவிட்டு, வெளிப்புற வகுப்புகள் மற்றும் இணையவழி வகுப்புகளை நடத்த ஊக்குவித்தது.
இதற்கு மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து அக்டோபா் 12 முதல் 30-ஆம் தேதிவரை 3 வாரங்களுக்கு அரசு, தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
‘ஆசிரியா்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டுள்ளதால், ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு அக். 12-ஆம் தேதி முதல் அக். 30-ஆம் தேதிவரை 3 வாரங்களுக்கு இடைக்கால விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் என் அன்புக்கு பாத்திரமான பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு முன்கூட்டியே தசரா திருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.