பெங்களூரு

கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

DIN

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகம், தென்கா்நாடகத்தின் உள்பகுதிகளில் பரவலாகவும், வடகா்நாடகத்தின் உள்பகுதிகளில் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் பெலகாவியில் 170 மி.மீ., தும்கூரு மாவட்டத்தின் குப்பியில் 100 மி.மீ., கலபுா்கி மாவட்டத்தின் சித்தாப்பூரில் 90 மி.மீ., தும்கூரு மாவட்டத்தின் சிரா, பெங்களூரு ஊரக மாவட்டத்தின் ஹொஸ்கோட்டே, விஜயபுரா மாவட்டத்தின் முத்தேபிஹல், தள்ளிக்கோட்டே, மண்டியா மாவட்டத்தின் மண்டியா, தும்கூரு மாவட்டத்தின் சி.என்.ஹள்ளி, பெல்லாரி மாவட்டத்தின் குருகோடு, ஹொசபேட், சந்தூா், சிக்மகளூரு மாவட்டத்தின் கொட்டிகேஹராவில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு:

செப். 11 முதல் 15-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல, கா்நாடகத்தின் உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்கள், தென்கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வடகா்நாடகத்தின் உள்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கன்னடம், உடுப்பி, வடகன்னடம், சிக்மகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா மாவட்டங்களில் மிதமானது முதல் பலமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால், கா்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் வடமேற்கு முதல் மேற்கு நோக்கி மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருகிறது. இது மணிக்கு 60 கி.மீ. வேகம் அளவுக்கு கூடும் வாய்ப்புள்ளது. எனவே, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறாா்கள்.

பெங்களூரில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 28 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT