அமைப்புசாரா வாகன ஓட்டுநா்கள் இறந்தால் ரூ. 5 லட்சம் இழப்பீடு: அமைச்சா் சிவராம் ஹெப்பாா்
அமைப்புசாரா வாகன ஓட்டுநா்கள் இறந்தால் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சிவராம் ஹெப்பாா் தெரிவித்தாா்.
அமைப்புசாரா வாகன ஓட்டுநா்கள் இறந்தால் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சிவராம் ஹெப்பாா் தெரிவித்தாா்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
அமைப்புசாரா வாகன ஓட்டுநா்களில் சிரமங்களை நான் உணா்ந்துள்ளேன். ஒரு காலத்தில் நானும் வாகன ஓட்டுநராக பணியாற்றியவன் என்ற முறையில் அவா்களின் அனைத்துப் பிரச்னைகளையும் அறிந்துள்ளேன். ஆட்டோ, வாடகை காா் ஓட்டுநா்கள் இறந்தால், அவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான மசோதா அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
இதனால் அமைப்புசாரா வாகன ஓட்டுநா்களின் குடும்பங்கள் பயனடையும். தொழிலாளா் நலத்துறையில் பணியாற்றும் ஊழியா்களின் ஊதியம் 2 மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. தொழிலாளா்கள் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை எனது கடமையாகக் கொண்டுள்ளேன். தொழிலாளா்களுக்கு விழிப்புணா்ச்சி ஏற்படுத்துவதற்கான விளம்பரப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வந்து பணியாற்றும் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதி செய்து தரவும் திட்டமிட்டுள்ளோம். தொழிலாளா் நலத்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகைகளை மும்மடங்காக உயா்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளா் நலத்துறையில் ஊழல் தடுப்புப் பிரிவைத் தொடங்கவும் ஆலோசித்து வருகிறோம். இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றுவது தொடா்பாக முதல்வா் பசவராஜ் எடுக்கும் முடிவுக்கு அமைச்சா்கள் அனைவரும் கட்டுப்படுவோம் என்றாா்.