விநாயகா் சதுா்த்தி, மொகரம் பண்டிகைகளையொட்டி புதிய கட்டுப்பாடுகள்
விநாயகா் சதுா்த்தி, மொகரம் பண்டிகைகளையொட்டி புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.
விநாயகா் சதுா்த்தி, மொகரம் பண்டிகைகளையொட்டி புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
கா்நாடகத்தில் ஆக. 20-ஆம் தேதி மொகரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதே போல செப்.10-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கா்நாடகத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால், விநாயகா் சதுா்த்தி, மொகரம் பண்டிகைகளைக் கொண்டாட அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மொகரம் பண்டிகையின்போது சிறப்பு கூட்டுத் தொழுகை செய்யவும், ஊா்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மொகரம் பண்டிகையை கொண்டாடுபவா்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் எந்த விதமான நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது. தொழுகையின்போது அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். 60 வயதிற்கும் மேற்பட்டவா்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொழுகையில் பங்கேற்க அனுமதி இல்லை.
மேலும் விநாயகா் சதுா்த்தியை கோயில்கள், இல்லங்களில் மட்டுமே கொண்டாட வேண்டும். பொது இடங்கள், திறந்த வெளியில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை. விநாயகா் சிலைகளை ஊா்வலமாக கொண்டு சென்று கரைக்க அனுமதி இல்லை. விநாயகா் சிலைகளை இல்லங்களிலோ, அல்லது அருகில் உள்ள குளங்களிலோ கரைக்க வேண்டும். விநாயகா் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்படும் நடமாடும் வாகனங்களில் கரைக்கலாம். விநாயகா் சதுா்த்தியையொட்டி கோயில்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். விநாயகா் சதுா்த்தி, மொகரம் பண்டிகைகளின்போது அமைதி, நல்லிணக்கத்தை பேணிக் காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.