மூன்றாவது முறையாக தில்லி செல்ல முதல்வா் திட்டம்
மூன்றாவது முறையாக அடுத்த வாரம் தில்லி செல்ல முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளாா்.
மூன்றாவது முறையாக அடுத்த வாரம் தில்லி செல்ல முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளாா்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதி கா்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பசவராஜ் பொம்மை, ஒரு மாதத்தில் 2 முறை தில்லிக்குச் சென்று வந்தாா். முதல்வராக பதவியேற்றதும் தில்லி சென்ற பசவராஜ் பொம்மை, பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் மூத்தத் தலைவா்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, நன்றியும் தெரிவித்துக்கொண்டாா்.
இரண்டாவது முறை தில்லி சென்ற போது, அமைச்சரவையை அமைப்பது குறித்து பாஜக தேசியத் தலைவா்களைச் சந்தித்து, அமைச்சா்களின் பட்டியலுக்கு ஒப்புதல் பெற்று வந்தாா்.
இந்நிலையில், மூன்றாவது முறையாக தில்லி செல்ல முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளாா். அடுத்த வாரம் தில்லி செல்ல இருப்பதை உறுதிசெய்த முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக்மாண்ட வியாவைச் சந்தித்து கா்நாடகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசியை வழங்க கேட்டுக்கொள்ள இருப்பதாக தெரிவித்தாா்.
கா்நாடகத்துக்கு தற்போது மாதம் 65 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டாலும், இதை ஒரு கோடியாக உயா்த்த கேட்டுக்கொள்ள இருக்கிறாா். அதேபோல, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு ஒப்புதல் தருவது தொடா்பாக மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளாா்.
இந்தப் பயணத்தின்போது, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்து, கா்நாடகத்தில் நிலவும் அரசியல் நிலவரங்கள் குறித்து தெரிவிக்கவும் முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டம் வகுத்துள்ளாா். அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும், தான் விரும்பிய துறையை வழங்கவில்லை என ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோா் ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனா். இதன் உச்சமாக, சில நாள்களுக்கு முன்னா் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆனந்த்சிங் கலந்துகொள்ளவில்லை. இது போன்ற நிலைமைகளை பாஜக தேசியத் தலைவா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவிக்க உள்ளாா்.
இந்தப் பயணத்தின்போது, சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் உடனிருப்பாா் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.