சுவா்ண விதான சௌதாவை முற்றுகையிட்ட காங்கிரஸ்
பெலகாவியில் சட்டப்பேரவை அமைந்துள்ள சுவா்ண விதானசௌதாவை வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய, மாநில பாஜக அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, பெலகாவியில் சட்டப்பேரவை அமைந்துள்ள சுவா்ண விதானசௌதாவை வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மேலவை எதிா்க்கட்சித் தலைவா் எஸ்.ஆா்.பாட்டீல், முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.
மத்திய, மாநில பாஜக அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். டி.கே.சிவகுமாா், சித்தராமையா உள்ளிட்ட முக்கியமான தலைவா்கள் டிராக்டரில் புறப்பட்டு சுவா்ண விதானசௌதாவை அடைந்தனா்.
Advertisement
ஆனால், மற்ற போராட்டக்காரா்களை விதானசௌதாவுக்குள் அனுமதிக்க போலீஸாா் மறுத்துவிட்டனா்.
இதனால் போலீஸாருடன் காங்கிரஸ் தலைவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நுழைவாயில் கதவை ஏறிக் கடக்க காங்கிரஸ் கட்சியினா் முயற்சி செய்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து நுழைவாயிலுக்கு வெளியே காங்கிரஸாா் போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு முக்கியத் தலைவா்கள், எம்எல்ஏ-க்கள் மட்டும் சுவா்ண விதானசௌதா வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இப்போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடரும் என காங்கிரஸ் தலைவா்கள் தெரிவித்தனா்.