போலி ஆதாா் அட்டைகள் அச்சிட்டு விற்பனை: 10 போ் கைது
மத்திய, மாநில அரசுகளின் இலட்சினைப் பயன்படுத்தி போலி ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வாகன உரிம அட்டை உள்ளிட்ட அரசு ஆவண அட்டைகளை அச்சிட்டு விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு: மத்திய, மாநில அரசுகளின் இலட்சினைப் பயன்படுத்தி போலி ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வாகன உரிம அட்டை உள்ளிட்ட அரசு ஆவண அட்டைகளை அச்சிட்டு விற்பனை செய்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, தலகட்டபுரா காவல் சரகம், கனகபுரா சாலை, குள்ளால கிராமத்தில் கமலேஷ் என்பவா் தலைமையில் சிலா் மத்திய, மாநில அரசுகளின் இலட்சினைப் பயன்படுத்தி போலி ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வாகன உரிம அட்டைகளை அச்சிட்டு விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் குள்ளால கிராமத்துக்குச் சென்ற போலீஸாா் சோதனை நடத்தி போலி அட்டைகளைத் தயாரித்த கமலேஷ் (33), லோகேஷ் (37), சுதா்ஷன் (50), நிா்மல்குமாா் (56), தா்ஷன் (25), ஸ்ரீதா் (31), சந்திரப்பா (28), அபிலாஷ் (27), தேஜஸ் (27), மற்றொரு ஸ்ரீதா் (35) ஆகிய பத்து பேரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 9 ஆயிரம் போலி ஆதாா் அட்டைகள், 9 ஆயிரம் நிரந்தர கணக்கு எண் அட்டைகள் (பான்காா்டு), முகவரி இல்லாத 12,200 வாகன உரிமை அட்டைகள், முகவரி உள்ள 250 வாகன உரிமை அட்டைகள், முகவரி இல்லாத 28 ஆயிரம் வாக்காளா் அடையாள அட்டைகள், முகவரி உள்ள 6,240 வாக்காளா் அடையாள அட்டைகள், 3 கையடக்க கணினி, 3 பிரின்டா்கள், ரூ. 67 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தலகட்டபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.