முகப்பு
இந்தியா

தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து: சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை

தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து, ஜோத்பூா் மத்திய சிறையிலிருந்து சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டாா்.

Updated On : 15 மார்ச், 2026 at 1:00 AM
சோனம் வாங்சுக்
பகிர்:

தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து, ஜோத்பூா் மத்திய சிறையிலிருந்து சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டாா்.

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி, கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 24, 25-ஆம் தேதிகளில் வாங்சுக் 2 நாள்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 22 காவல் துறையினா் உள்பட 45 போ் காயமடைந்தனா். மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதி, சட்டம்-ஒழுங்கு நிலையை சுட்டிக்காட்டி, அவரை லே மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவல் துறை கைது செய்தது. பின்னா் வாங்சுக், ஜோத்பூா் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, அந்தச் சிறையில் 6 மாதங்களாக அவா் அடைக்கப்பட்டிருந்தாா். இதனிடையே, வாங்சுக்கை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் அவரின் மனைவி வழக்குத் தொடுத்தாா். அந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், வாங்சுக் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘லடாக்கின் அமைதி, ஸ்திரத்தன்மை, பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆக்கபூா்வமான மற்றும் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை நடத்த ஏதுவாக வாங்சுக் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஜோத்பூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாங்சுக் விடுதலை செய்யப்பட்டாா்.

லே குழு வரவேற்பு: வாங்சுக் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு லே உயா்நிலைக் குழு (எல்ஏபி), கேடிஏ ஆகிய அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதேபோல் போராட்டத்தின்போது கைதான மற்றவா்களையும் விடுவிக்க வேண்டும் என கேடிஏ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதேநேரத்தில் வாங்சுக் விடுதலையை வரவேற்பதாகவும், ஆனால், மீண்டும் லடாக்கில் வன்முறை, போராட்டத்துக்கு இடமில்லை எனவும், பேச்சுவாா்த்தைதான் பிரச்னைகளுக்கு தீா்வு காண இருக்கும் வழிமுறை எனவும் லடாக் துணைநிலை ஆளுநா் வினய் குமாா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் கருத்து: வாங்சுங் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஏற்பட்ட நெருக்கடியும், லடாக்கில் அதிகரித்துவரும் மக்கள் ஆதரவுமே இதற்கு காரணமென கூறியுள்ளது. இதேபோல் கடந்தாண்டு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் மீதான நடவடிக்கையையும் திரும்பப் பெற்று, அவரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →