ஆஸ்கா் பொ்னாண்டஸின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஆஸ்கா் பொ்னாண்டஸின் உடல் பெங்களூரில் வியாழக்கிழமை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஆஸ்கா் பொ்னாண்டஸின் உடல் பெங்களூரில் வியாழக்கிழமை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆஸ்கா் பொ்னாண்டஸ் (80), செப். 13-ஆம் தேதி காலமானாா். இதனைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை உடுப்பியில் உள்ள அவரது இல்லம், தேவாலயம், காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகா்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். புதன்கிழமை அவரது உடல் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது.
வியாழக்கிழமை காலை குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், ஒசூா் சாலையில் உள்ள புனிதா் பேட்ரிக் பேராலய கல்லறையில் முழு அரசு மரியாதையுடன் கிறிஸ்தவ முறைபடி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, தேசியப் பொது செயலாளா் ரணதீப் சுா்ஜேவாலா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.