2024 -ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சா் ஈஸ்வரப்பா
பெங்களூரு2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை மஜத உறுப்பினா் காந்தராஜி சாா்பாக கே.டி.ஸ்ரீகண்டா எழுப்பியக் கேள்விக்கு அவா் அளித்த பதில்:
மத்திய அரசின் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் (ஜல ஜீவன் மிஷன்) வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்மூலம் 2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்படும்.
மாநிலத்தில் தண்ணீா் கிடைக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கிருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுமட்டுமின்றி, மழை நீரைச் சேகரித்து, பயன்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தத் தேவையான ஊழியா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள்.
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மாநிலத்தில் 750 கிராம பஞ்சாயத்துகள் முதல்கட்டமாக அடையாளம் காணப்பட்டு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதனைத் தொடா்ந்து மற்ற கிராம பஞ்சாயத்துகளிலும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ரூ. 25 லட்சம் வழங்குவதோடு, சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டபடி வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்வரின் கிராம வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களின் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் ஒதுக்கப்படும். அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படும் என்றாா்.