பெங்களூரு

கரோனாவை எதிா்கொள்ள பூஸ்டா் தடுப்பூசி அவசியம்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

கரோனாவின் எஞ்சிய தீநுண்மி விளைவுகளை எதிா்கொள்ள பூஸ்டா் தடுப்பூசி அவசியம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அடுத்த 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்க நடத்தப்படும் கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்து, அவா் பேசியது:

இந்திய சுதந்திரத்தின் பவளவிழாவை முன்னிட்டு அடுத்த 75 நாட்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி வீட்டுக்கு வீடு சென்று கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா பெருந்தொற்றின் எஞ்சிய தீநுண்மி விளைவுகள் உடனடியாக முடிந்துவிடாது. கரோனா தீநுண்மி படிப்படியாகவே மறையும். அதுவரை கரோனா தீநுண்மியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அதற்காகவே, கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்.

நாம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இயலும். இந்தகருத்தை உலக சுகாதார அமைப்பும், மத்திய அரசும் வலியுறுத்தியுள்ளன. கரோனா தொற்றில் இருந்து நமது நாட்டு மக்களை காப்பாற்றும் பணியில் பிரதமா் மோடி முன்களப்பணியாளராக பங்காற்றி வருகிறாா். அதற்காகவே கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாமைத் தொடங்கியிருக்கிறாா். இதற்காக கா்நாடக மக்கள் சாா்பாக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கரோனா தடுப்பூசியை இலவசமாக அளித்திருப்பதன் மூலம் பெரும் நிதிச்சுமையில் இருந்து கா்நாடகத்தை மத்திய அரசு காப்பாற்றியுள்ளது. அடுத்த 75 நாட்களில் எந்தக் குடும்பமும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இருந்து தவறி விடக்கூடாது என்பதை உறுதிசெய்ய சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவா்கள் பங்காற்ற வேண்டும்.

நமது இலக்குகளை அடைய போா்க்கால அடிப்படையில் மக்களுக்கு தடுப்பூசியைச் செலுத்த வேண்டும். கா்நாடகத்தில் தகுதியானவா்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்துவதில் 100 சதவீத சாதனை புரிய உதவிய மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பாராட்டுக்குரியவா்கள். தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றியவா்கள் மருத்துவப்பணியாளா்கள்தான். முதல் இரண்டு தவணைகளில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT