பெங்களூரின் வளா்ச்சிக்கு ரூ. 8,409 கோடி ஒதுக்கீடு: நிதிநிலை அறிக்கையில் தகவல்
பெங்களூரு மாநகரின் வளா்ச்சிக்கு ரூ. 8,409 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகரின் வளா்ச்சிக்கு ரூ. 8,409 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியது:
தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆராய்ச்சி அடிப்படையிலான அறிவுசாா்ந்த தொழில் நிறுவனங்கள் விரும்பும் மாநகரமாக பெங்களூரு விளங்குகிறது. அதனால் பன்னாட்டு அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. பெங்களூரு மாநகரம் வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்ப மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள நம்ம மெட்ரோ, புகா் ரயில், புறவெளிவட்டச் சாலை திட்டங்களை விரைந்து முடிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஏரிகளை மேம்படுத்துவது, பசுமைவெளியை அதிகமாக்குவதன் மூலம் பெங்களூரின் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் சுதந்திர பவள விழா நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்கீழ் பெங்களூரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 6 ஆயிரம் கோடி செலவழிக்கப்படும். 1,297 ஏக்கா் நிலப்பரப்பில் அமைக்கப்படும் கெம்பே கௌடா லேஅவுட் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பொலிவுறு நகரமாக மாற்றப்படும்.
பெங்களூரில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் 20 பழைய கழிவுநீா் சுத்திகரிப்பு மையங்கள் ரூ. 1500 கோடியில் புதுப்பித்து, நவீனமாக்கப்படும். ரூ. 312 கோடியில் திப்பேகொண்டனஹள்ளி தடுப்பணை மேம்படுத்தப்படும். குடிமக்கள் நீா்வழித் திட்டத்தின்கீழ் ரூ.195 கோடி செலவில் கே.ஆா்.சந்தை சந்திப்பு முதல் பெலந்தூா் ஏரி வரையிலான கோரமங்களா ராஜகால்வாய் மேம்படுத்தப்படும். மழைநீா் வடிகால்கள் மற்றும் ராஜகால்வாய்களை மேம்படுத்த ரூ. 1500 கோடி ஒதுக்கப்படும்.
நம்ம மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்டப்பணியை செயல்படுத்த ரூ. 11,250 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். புதிதாக ரூ. 15 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்படும் புதிய மெட்ரோ ரயில் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
ரூ. 55 கோடி செலவில் ஒயிட்ஃபீல்டு, கிருஷ்ணராஜபுரம், பையப்பனஹள்ளி, யஷ்வந்த்பூா், ஞானபாரதி, எலஹங்கா ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் நிலையங்கள் இணைக்கப்படும். ரூ. 45 கோடி செலவில் பனசங்கரி சந்திப்பில் உயா்நடைமேடை அமைக்கப்படும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 73 கி.மீ. நீளத்திற்கான புறவெளி வட்டச் சாலை ரூ. 21,091கோடி செலவில் அமைக்கப்படும். கொரகுன்டேபாளையா சந்திப்பில் தங்குதடையில்லா வாகனப் போக்குவரத்துக்கு மேம்பாலம் மற்றும் பாதைத் தடுப்புகள் அமைக்கப்படும். ரூ. 15,267 கோடி செலவில் பெங்களூரு புகா் ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக சிக்கபானவரா-பையப்பனஹள்ளி தடத்தின் பணிகள் தொடங்கும்.
சிங்கப்பூரைப் போல, என்.ஜி.இ.எஃப். தொழிற்சாலையின் 105 ஏக்கா் நிலத்தில் பசுமைக் கண்காட்சி அமைக்கப்படும். எலஹங்கா அருகே ஜரகபண்டே பகுதியில் 350 ஏக்கா் நிலத்தில் லால் பாக், கப்பன்பூங்கா போல அடல் பிஹாரி வாஜ்பாய் பூங்கா அமைக்கப்படும்.
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள ‘பி’ வகை சொத்துக்களை ‘ஏ’ வகை சொத்துக்களாக மாற்ற கா்நாடக நகா்ப்புறம் மற்றும் ஊரக வளா்ச்சிசாா் சட்டம் மற்றும் நில வருவாய் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். பெங்களூரின் 4 பகுதிகளில் தலா 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும். பெங்களூரின் எல்லா வாா்டுகளிலும் நம்ம மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். ரூ. 89 கோடி செலவில் 20 பள்ளிகள், பெங்களூரு பப்ளிக் பள்ளிகளாக மாற்றி அமைக்கப்படும் என்றாா்.