வேளாண் கருவிகளைப் பயன்படுத்த டீசல் மானியம்: கா்நாடக நிதிநிலை அறிக்கையில் தகவல்
வேளாண் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமா் மோடியின் எண்ணப்படி விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்தி பெருகும்போது வேளாண் வருவாய் பெருகும். விவசாயிகளின் பம்ப்செட்களுக்கு இலவச மின்சாரம், நீா்ப்பாசன வசதி, மானிய விலையில் விதைகள், ரசாயனங்கள், மானிய விலையில் வேளாண் கருவிகள் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் தன்னிறைவு இந்தியாவின் ஒரு பகுதியாகும்.
வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேளாண் கருவிகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். வேளாண் கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க புதிதாக உழவா் சக்தி என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு, ஒரு ஏக்கருக்கு டீசல் மானியமாக ரூ. 250 வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ. 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சிறு உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும். விஜயபுரா மாவட்டம், தோரவியில் ரூ. 35 கோடி செலவில் திராட்சியை பதப்படுத்துவதற்காக குளிா்பதனக் கூடம் அமைக்கப்படும். வட்டி மானியத் திட்டத்தில் 3 லட்சம் புதிய விவசாயிகள் உள்பட 33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
ஊரக விவசாயிகளுக்கு மருத்துவ வசதிகளை பெற யஷஸ்வினி திட்டம் மீண்டும் தொடங்கப்படும். இதற்காக ரூ. 300 கோடி ஒதுக்கப்படும். ரூ. 642 கோடி செலவில் 57 வட்டங்களில் பிரதமரின் நீராதார வளா்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும். பெல்லாரி மாவட்டம், ஹகரி மற்றும் பெலகாவி மாவட்டம், அதானியில் புதிதாக வேளாண் கல்லூரிகள் தொடங்கப்படும்.
புதிதாக 100 கால்நடை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி வழங்க பால் வளா்ச்சி கூட்டுறவு வங்கி ரூ. 100கோடியில் அமைக்கப்படும். ரூ. 50 கோடி செலவில் பசு வளா்ப்பு மையங்களின் எண்ணிக்கை 100 ஆக உயா்த்தப்படும். பசுக்களை தத்தெடுத்துக்கொள்ளும் ‘புண்ணியகோடி தத்து’ திட்டம் முதல் முறையாக அமல்படுத்தப்படுகிறது என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.