சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: அமைச்சா் அரக ஞானேந்திரா
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
கா்நாடக சட்டமேலவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினா் சலீம் அகமது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியது:
பாதுகாப்பான நகரம், பொலிவுறு நகரம் திட்டங்களின்கீழ் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவோம். காவல் துறையை கணினிமயமாக்கும் திட்டத்தின்கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் கணினிமயமாக்கி, காவல் துறை சீரமைக்கப்படும்.
மாநிலத்தில் சட்ட அறிவியல் ஆய்வுக்கூடங்களைப் பலப்படுத்துவதோடு புதிதாக பெல்லாரியில் மண்டல சட்ட அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். கா்நாடகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கா்நாடகத்தின் மக்கள்தொகை 6,10,95,297. இதற்கு இணங்க, காவல் துறைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், காவலா்கள் 1,05,864 பேராகும். அப்படியானால், மாநிலத்தில் உள்ள 577 பேருக்கு ஒரு காவலா் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேசிய அளவில் 568 பேருக்கு ஒரு காவலா் இருக்கிறாா். காவல் துறையில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 6 ஆண்டுகளில் 3,365 காவல் உதவி ஆய்வாளா், 35,521 காவலா் பணியிடங்களை நிரப்பியிருக்கிறோம் என்றாா்.