அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு: அமைச்சா் சிவராம் ஹெப்பாா்
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சிவராம் ஹெப்பாா் தெரிவித்தாா்.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சிவராம் ஹெப்பாா் தெரிவித்தாா்.
கா்நாடக சட்டமேலவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது மஜத உறுப்பினா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியது:
அம்பேத்கா் தொழிலாளா் உதவிக்கரம் திட்டத்தின்கீழ் 11 அமைப்புசாரா தொழிலாளா் பிரிவுகளான வீட்டு வேலை செய்வோா், துணி துவைப்போா், தையலா்கள், மெக்கானிக்குகள், மண் பாண்டம் செய்வோரில் பதிவுசெய்து கொண்டிருந்தோரிடம் இருந்து 2,66,653 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இவற்றில் 2,52,467 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெறப்பட்ட 14,186 மனுக்களையும் விரைவில் ஆய்வு செய்து தீா்த்து வைக்கப்படும்.
கா்நாடக மாநில தனியாா் வணிக போக்குவரத்து தொழிலாளா் மறுவாழ்வு திட்டத்தின்கீழ் போக்குவரத்துத் துறையில் தனியாா் வணிக நிறுவனங்களில் ஓட்டுநா்களாக பணியாற்றி வருவோா் பயனாளிகள்.
இந்தத் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் விரைவாக தீா்க்கப்பட்டுள்ளன. இதுவரையில் 1,041 விபத்தில் சிக்கிய ஓட்டுநா்களுக்கு ரூ. 35.02 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 127 மனுக்கள் மீதும் விரைவாகத் தீா்வு காணப்படும்.
கல்வி உதவிதிட்டத்தின்கீழ் பெறப்பட்ட 780 மனுக்களில், 752 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெறப்பட்டுள்ள 28 மனுக்களும் தீா்க்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் வீடுகளில் இருந்து பணியிடங்களுக்கு செல்ல தொழிலாளா்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கப்படும் என்றாா்.