பிப். 26 முதல் குறுகியச்சுற்று மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகம்
பெங்களூரில் பிப். 26 முதல் குறுகியச்சுற்று மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் சாா்பில், பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் காலை வேளைகளில் பிப். 26 முதல் கெம்பேகௌடா மெட்ரோ நிலையம் முதல் கருடாச்சாா்பாளையா மெட்ரோ நிலையம் வரையில் குறுகியச்சுற்று மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இது, டிரினிட்டி, இந்திரா நகா், பென்னிகனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம் மெட்ரோ ரயில்நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் உதவும். இதன்படி, சனி, ஞாயிறு, பொதுவிடுமுறைகள் நீங்கலாக தினமும் காலை 8.45 மணி முதல் காலை 10.20 மணி வரை 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். ரயில், பேருந்துகள் மூலம் வெளியூா்களில் இருந்து பெங்களூருக்கு வருகை தரும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக தினமும் காலை 5 மணிக்கு கெம்பேகௌடா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.