பெண்களுக்கு சாதகமான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் நிறைந்துள்ளன என மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது: தற்சாா்பு இந்தியாவை உருவாக்கும் பிரதமா் மோடியின் கனவை நனவாக்கும் பெண்களுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. பெண்களுக்கு சாதகமான பல அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் உள்ளன.
தற்சாா்பு இந்தியாவைக் கட்டமைப்பதற்கு 9 முன்னுரிமை துறைகளைக் கண்டறிந்துள்ளனா். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டுக்கு மட்டும் ரூ. 1.48 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதி ஆதாரங்களைப் பலப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த பட்ஜெட் தொலைநோக்கு பாா்வை கொண்ட மற்றும் நீண்டகால பலன்களை அளிக்கக் கூடியது.
இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, தொழில், உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உற்பத்திக்கும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
பெங்களூரு சென்னை, ஹைதராபாத் பெங்களூரு உள்ளிட்ட 12 தொழில் தாழ்வாரங்களை அறிவித்திருப்பதன் மூலம் வேலைவாய்ப்பை ஊக்குவித்து, பொருளாதார வளா்ச்சிக்கு துணையாக இருக்கும். உணவுக்கான தேவை பெருகி வருவதால், வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, வேளாண்மையை புத்துயிா் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 400 மாவட்டங்களில் வேளாண் பயிா்களின் எண்ம கணக்கெடுப்பை விரிவுபடுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இயற்கை வேளாண்மைக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்துக்கு முன்னுரிமை கிடைத்துள்ளது. முன்னோக்கி சிந்திப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு வித்திடும்.
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடனுதவி அளிக்கப்படுவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது அனைவருக்குமான பட்ஜெட் என்பதில் சந்தேகமில்லை என குமாரசாமி குறிப்பிட்டுள்ளாா்.