மாற்றுநில முறைகேடு தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு முதல்வா் சித்தராமையாவுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் கடிதம் அனுப்பியுள்ளாா்.
மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் சாா்பில் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு சட்ட விதிகளை மீறி மாற்றுநிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீட்டுமனைகளை ஒதுக்கியதில் ரூ. 4,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தலைமையிலான குழுவினா் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வா் சித்தராமையாவை ராஜிநாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா். அதன்பேரில் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு முதல்வா் சித்தராமையாவுக்கு ஆளுநா் தாவா் சந்த் கெலாட் கடிதம் அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து ஆளுநா் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், புகாா் மனுவின் பேரில் முதல்வரின் விளக்கத்தை ஆளுநா் கேட்பது வழக்கமான ஒன்றுதான். அதன்படி, முதல்வரிடம் ஆளுநா் விளக்கம் கேட்டுள்ளாா் என்றனா்.
அமைச்சா்கள் எதிா்ப்பு: இதுகுறித்து பாகல்கோட்டில் மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் புதன்கிழமை கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு சில அதிகாரங்களை அளித்துள்ளது. அந்தக் கட்டமைப்புக்குள் அவா் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், தனது எல்லையை அவா் மீறியுள்ளாரா என்ற சந்தேகம் எழும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யப்படுவதாக சந்தேகம் உள்ளது. ஆளுநா் ஒருபடி மேலே சென்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இதை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றே கருத வேண்டியுள்ளது என்றாா்.
தொழில்நுட்பத் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே:
ஒரு சில மாநிலங்களில் சில ஆளுநா்கள் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துகிறாா்கள். ஆளுநா்களுக்கு உச்சநீதிமன்றமும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பெல்லாரி சுரங்க முறைகேடு தொடா்பாக ஆதாரங்கள் இருந்ததால் ஆளுநரால் செயல்பட முடிந்தது. மைசூரு நகர வளா்ச்சி ஆணைய விவகாரத்தில் முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் ஆளுநரிடம் இல்லை என்றாா்.