பொருளாதார ஜனநாயகம் ராகுலுக்குப் புரியாது: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா
வாரிசாக அரசியலில் கால்பதித்த ராகுல் காந்திக்கு பொருளாதார ஜனநாயகம் புரியாது என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்த பேட்டி: குடும்பத்தின் பணத்தில் திளைத்து, அரசியல் வாரிசாக உருவெடுத்த ராகுல் காந்திக்கு பொருளாதார ஜனநாயகத்தை புரிந்து கொள்ள முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் வாரிசு அரசியலுக்கு எதிராக பிரதமா் மோடி போா் புரிந்து வந்துள்ளாா். அதுமட்டுமன்றி, பொருளாதாரக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்தி உள்ளாா். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏராளமானோா் தொழில்முனைவோா், செல்வந்தா்களாக உருவெடுத்து வருகின்றனா். ஓரிரு தொழில்முனைவோரை மட்டுமே மத்திய அரசு ஆதரிப்பதாகக் கூறுவது அபத்தமாகும். வலுவான கனவுகள், கடின உழைப்பை நம்பி யூனிகாா்ன் நிறுவனங்களை உருவாக்கும் ஆற்றல் படைத்த இளம் தலைமுறையை ஊக்குவித்து, வலிமைப்படுத்தினால் அதற்காக எப்படி மத்திய அரசை குறைகூற முடியும். புவிசாா் அரசியலில் இந்தியா தனது நிலையை வலுவாக்கிக் கொண்டுள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பது தான் வளா்ந்த இந்தியாவுக்கான அடித்தளம் அமைக்க கிடைக்கும் சிறந்த வாய்ப்பாகும். இதை பிரதமா் மோடியே பலமுறை கூறியிருக்கிறாா். மக்களவைத் தோ்தலில் கா்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். சித்தராமையா தலைமையிலான கா்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்து வருகிறது என்றாா்.