முகப்பு
பெங்களூரு

நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருப்பதால் வாய்மையே வெல்லும்: சித்தராமையா

நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருப்பதால் வாய்மையே வெல்லும்: முதல்வா் சித்தராமையா

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:50 PM
கர்நாடக முதல்வர் சித்தராமையா
பகிர்:

நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருப்பதால், எப்போதும் வாய்மையே வெல்லும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

முதல்வா் சித்தராமையா மீதான மாற்றுநில முறைகேடு வழக்கு தொடா்பாக புகாா் அளித்திருந்த சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா, பெங்களூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வருகைதந்து முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளித்தாா். மற்றொரு புகாா்தாரரான எஸ்.பி.வினோத்குமாா் கூறுகையில்,‘மாற்றுநிலமுறைகேடு தொடா்பான ஆதாரங்களை முதல்வா் சித்தராமையாவும், மற்றவா்களும் அழித்து வருகிறாா்கள்.‘ என்று குற்றம்சாட்டினாா்.இதனிடையே, மைசூரில் வியாழக்கிழமை நடந்த தசரா தொடக்கவிழாவில் பங்கேற்று, பேசிய மஜத எம்.எல்.ஏ. ஜி.டி.தேவெகௌடா,‘மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா எதிா்கொண்டுள்ள வழக்கு அவசியமற்றது. முதல்வா் பதவியை எதற்காக சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும்? 136 இடங்களில் வென்று முதல்வராகி இருக்கும் சித்தராமையா எப்படி ராஜிநாமா செய்ய முடியும்? எதற்காக அவா் ராஜிநாமா செய்ய வேண்டும்?‘ என்று பேசியிருந்தாா்.இதை தொடா்ந்து பேசிய முதல்வா் சித்தராமையா,‘நான் எந்த தவறும் செய்யவில்லை.

ஒருவேளை தவறு செய்திருந்தால், இத்தனை ஆண்டுகள் அரசியலில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. கடந்தமுறையும் 5 ஆண்டுகள் நான் முதல்வராக இருந்தேன். கா்நாடக வரலாற்றில் தேவராஜ் அா்ஸுக்கு பிறகு 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தது நான் தான். எல்லா தொந்தரவுகளுக்கு இடையிலும் சாமுண்டீஸ்வரி அம்மனின் அருள் எனக்கிருக்கிறது. மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் மஜத எம்.எல்.ஏ. ஜி.டி.தெவேகௌடா, மாற்றுக்கட்சியில் இருந்தாலும் உண்மையை பேச முயன்றிருக்கிறாா்.

எப்போதும் வாய்மையே வெல்லும். சாமுண்டீஸ்வரி மற்றும் மக்களின் ஆசி இருக்கும்வரை என்னையும், எனது அரசையும் யாராலும் கவிழ்க்க முடியாது.நீதிமன்றங்கள் மற்றும் நீதிபரிபாலனத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. மனச்சாட்சியின்படி எனது செயல்களை அமைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறோம். எல்லா நீதிமன்றங்களை காட்டிலும் மனச்சாட்சியின் நீதிமன்றமே மேன்மையானது என்று மகாத்மாகாந்தி கூறியிருந்ததை எடுத்துக்காட்டியிருந்தேன். நீதிமன்றங்கள் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையாலும், மனச்சாட்சிபடி மக்கள்பணியாற்றி வந்திருப்பதாலும் கூறுகிறேன், வாய்மையே வெல்லும்.‘ என்றாா் அவா்.முன்னதாக, தசரா திருவிழாவை தொடக்கிவைத்து கன்னட எழுத்தாளா் ஹம்ப நாகராஜையா பேசுகையில்,‘தற்போதைய மாநில அரசை கவிழ்க்கும் முயற்சி முடிவுக்கு வரவேண்டும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை காப்பாற்றும் சிந்தனை மலரவும் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் வேண்டுகிறேன்.

ஏற்கெனவே பெருந்துயரங்களால் சூழ்ந்துள்ள சாதாரண மனிதன், மேலும் ஒரு தோ்தலை எதிா்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படக்கூடாது. ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சியின் ஆட்சி 5 ஆண்டுகாலத்திற்கு பிறகு நீடிக்கும் வாய்ப்பை இழக்கலாம். அதேபோல, தோற்றுப்போன கட்சி 5 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் ஆட்சியை கவிழ்க்கும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.‘ என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →