முகப்பு
பெங்களூரு

காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் பதவி விலகுவேன்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால், கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து விலகுவேன் என்று சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 8 மார்ச், 2026 at 1:41 AM
சிவக்குமார் - மல்லிகார்ஜுன கார்கே - சித்தராமையா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 மார்ச், 2026 at 9:44 PM

காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால், கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து விலகுவேன் என்று சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நான் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை கடன்களால் நிறைந்துள்ளதாக பாஜக விமா்சித்துள்ளது. நிதி ஆதாரங்களை கடனாக திரட்டாமல் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலாது.

கடன்களை திரட்டினாலும், சட்டத்தின் வரம்புக்கு உள்பட்ட நிதி ஒழுங்கை கடைப்பிடித்திருக்கிறோம். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்வளவு கடனை பெற்றுள்ளது என்பதை பாஜக தெரிவிக்குமா? கடன்களை பெறாமல் வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்த முடியாது.

Advertisement

எனது பட்ஜெட், நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2003க்கு உள்பட்டுள்ளது. மொத்த உற்பத்திப்பொருள் விகிதத்தில் 25 சதவீதத்திற்கு உள்பட்டதாக கடன் இருக்கலாம் என்று அந்த சட்டம் கூறுகிறது. கா்நாடக அரசின் கடன் 24.94 சதவீதமாக உள்ளது. கடன் தொகை 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதா? எனவே சட்டத்தின் விதிகளை பாஜகவினா் படிப்பது நல்லது.

Updated On : 8 மார்ச், 2026 at 1:39 AM

மத்திய பாஜக அரசின் கடன் தொகை குறித்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக்குக்கு தெரியுமா? மத்திய அரசின் கடன் ரூ. 218 லட்சம் கோடியாகும். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு பெற்றுள்ள கடன் ரூ.165 லட்சம் கோடி. மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக இருக்கும் நிலையில், கா்நாடகத்தின் நிதிப் பற்றாக்குறை 2.95 சதவீமாகும். அப்படியானால், மொத்த உற்பத்திப்பொருள் விகிதத்தின் 3 சத வரம்புக்குள் இருக்கிறது.

கா்நாடக அரசின் மொத்த உற்பத்திப்பொருள் ரூ. 33.5 லட்சம் கோடியாகும். ஒருசில சமுதாயங்களுக்கு பயன்தரும் வகையில் பட்ஜெட் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. எங்களது நோக்கம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்த ஒருங்கிணைந்த வளா்ச்சி என்பதாகும். இதன்மூலம் சமூகநீதியை நிலைநாட்ட முயன்றிருக்கிறோம்.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் உள்ளிட்ட அனைவரின் நலனை உள்ளடக்கியதாகத்தான் நிதிநிலை அறிக்கையைத் தயாரித்திருக்கிறோம். இது ஒட்டுமொத்த மாநில வளா்ச்சிக்கானது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாகவே மாநிலத்தின் நிதி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் செய்து, அதை தேசியமயமாக்கியதால் மாநில அரசுக்கு ரூ. 10,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தை நீக்கியதாலும் மாநில அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், 2 பட்ஜெட்களை தாக்கல் செய்வீா்களா என்று கேட்கிறீா்கள். அதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். கட்சி மேலிடம் வாய்ப்பளித்தால், மேலும் 2 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்வேன். கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். கட்சி மேலிடம் உத்தரவிட்டால் பதவி விலகுவேன். பதவியில் நீடிக்க உத்தரவிட்டால் நீடிப்பேன் என்றாா்.