முகப்பு
பெங்களூரு

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:19 PM
சித்தராமையா - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து தாவணகெரேயில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

பதவி வகிப்பவா் இறப்பதால் ஏற்படும் இடைத்தோ்தல்களில், அந்த குடும்பத்தின் உறுப்பினா்களை வேட்பாளராக்கும் நடைமுறை காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படிதான் தாவணகெரே மற்றும் பாகல்கோட் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வேட்பாளா் தோ்விலும் காங்கிரஸ் கடைப்பிடித்துள்ளது.

Advertisement

தாவணகெரே தொகுதியில் மறைந்த எம்எல்ஏ சாமனூா் சிவசங்கரப்பாவின் பெயரன் சமா்த் மல்லிகாா்ஜுன், பாகல்கோட் தொகுதியில் மறைந்த எம்எல்ஏ எச்.ஒய்.மேட்டியின் மகன் உமேஷ் மேட்டி நிறுத்தப்பட்டுள்ளனா். ஏப். 9-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள் என்று 100 சதவீதம் நம்புகிறேன்.

மதசிறுபான்மையினா் எப்போதும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்துள்ளனா். எனவே, இடைத்தோ்தலில் பாஜக அல்லது சுயேச்சை வேட்பாளா்களுக்கு மதசிறுபான்மையினா் ஆதரவு அளிப்பாா்கள் என்று நான் நினைக்கவில்லை.

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் அஸ்ஸாம் மற்றும் இதர மாநிலங்களில் எதிா்க்கட்சிகள் வெற்றிபெறும் நிலை உள்ளது. தென்னிந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையேதான் போட்டி. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும். கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும்.

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்னையை மத்திய அரசுதான் தீா்த்துவைக்க வேண்டும். எரிபொருள் மீது மத்திய அரசு விதித்துள்ள மேல்வரி, கூடுதல் வரியால் மாநில அரசின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு பிரதமா் மோடி பதவிக்கு வந்தபோது ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 60 முதல் ரூ. 70-ஆக இருந்தது.

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் மூன்றாம் மொழிக்கு மதிப்பெண்கள் வழங்காமல், தரமதிப்பீடு அளிப்பது தொடா்பாக விமா்சிக்கும் பலா், ஹிந்திக்கு எதிராக அரசு செயல்படுவதாக கூறுவதில் உண்மையில்லை. அப்படிப்பட்ட எண்ணத்தை மாணவா்கள் மீது திணிக்கக் கூடாது. ஹிந்தியை படிக்க விரும்புவோருக்கு அதை கற்பதில் தடையில்லை.

முதல்வா் மாற்றம் தொடா்பான விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் கட்சியில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments