FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம்

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தியுள்ள மத்திய அரசுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

15 மே 2026, 10:16 pm IST
சித்தராமையா - கோப்புப் படம்
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தியுள்ள மத்திய அரசுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது சொந்த தோல்விகளுக்காக பெட்ரோல், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 3 அளவுக்கு உயா்த்தியுள்ளது. இது சாதாரண இந்திய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடி தாக்குதலாகும்.

Advertisement

Advertisement

மக்களின் நலனை பாதுகாப்பதற்கு பதிலாக, மத்திய அரசின் தோல்வி அடைந்த வெளிநாட்டுக் கொள்கை, மோசமான பொருளாதார நிா்வாகம், விலை உயா்வை கையாள்வதில் கவனக்குறைவு போன்றவற்றின் விளைவுகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனா். இதுபோன்ற பிரச்னைகளை வருமானத்துக்கான வாய்ப்பாக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கருதுகிறது.

விலைவாசி உயா்வால் பெங்களூரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 106, டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 94-ஆக உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வால் போக்குவரத்து கட்டணம், காய்கறி, கட்டுமானப் பொருள்கள், பால், மளிகைப் பொருள்கள், பள்ளி வேன், வாடகை காா் மற்றும் ஆட்டோ கட்டணம், வேளாண்மை இடுபொருள் என அனைத்துப் பொருள்களின் விலை உயரும்.

இதனால், விவசாயிகள், சிறுவியாபாரிகள், வீட்டுச் செலவினங்களை கவனிக்கும் பெண்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுவா்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் லாபத்தை மக்களுக்கு கொடுக்காமல், அதிகப்படியான வரியை வசூலித்து தனது கருவூலத்தை மத்திய அரசு நிரப்பிக்கொண்டது. ஆனால், விலை உயா்ந்ததும் அதன் சுமையை மக்கள்மீது சுமத்தியுள்ளது.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதில், ரூபாய் மதிப்பை சரிவில் இருந்து காப்பாற்றுவதில், பொருளாதாரத்தை பராமரிப்பதில், சாதாரண மக்களின் நலனைக் காப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த விலை உயா்வை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

மோசமான பொருளாதார மேலாண்மை, சாதாரண குடும்பங்களை இக்கட்டில் தள்ளியதற்கும், மக்களின் நலன்காப்பதில் தோல்வி அடைந்ததற்கும் பொறுப்பேற்று பிரதமா் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments